கால்நடைக்கு 'பிளாஸ்டிக்' உணவு!வனத்தில் குவியும் குப்பையால் சுற்றுச்சூழல் பாதிப்பால் நோய் அபாயம்

தினமலர்  தினமலர்
கால்நடைக்கு பிளாஸ்டிக் உணவு!வனத்தில் குவியும் குப்பையால் சுற்றுச்சூழல் பாதிப்பால் நோய் அபாயம்

பந்தலுார்:பந்தலுார் அருகே, நெலாக்கோட்டை சாலையோர வனத்தில் குவிக்கப்பட்டுள்ள குப்பையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
பந்தலுார் அருகே, நெலாக்கோட்டை ஊராட்சியில், 15 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பையை கொட்ட தனியாக குப்பை கிடங்கு இல்லை. இதனால், கடந்த பல ஆண்டுகளாக நெலாக்கோட்டை பஜாரை ஒட்டிய, பிதர்காடு வனப்பகுதியில் குப்பை; கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
குப்பையுடன் பிளாஸ்டிக் கழிவு, மனிதமுடி, கோழி மற்றும் மாட்டு இறைச்சிகளின் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனை அவ்வப்போது ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் எரியூட்டுவதால், இதிலிருந்து எழும் துர்நாற்றம் மற்றும் வீசும் புகையால், இப்பகுதி மக்களும், இப்பகுதியில் உள்ள சாலையில் செல்வோரும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
அத்துடன் குப்பை கழிவுகளில், உணவுடன் காணப்படும் 'பிளாஸ்டிக்' கழிவுகளை கால்நடைகள் உட்கொள்வதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் தொடர்கிறது. இங்கு கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை உட்கொள்ள அடிக்கடி வரும் புலி உட்பட பிற விலங்குகளாலும் கால்நடைகள் இறந்து வருகின்றன.
மேலும், இப்பகுதியின் அருகே, விலங்கூர், கொட்டாய்மேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் குடிநீர் கிணறுகளுக்கான நீராதாரங்கள் அமைந்துள்ளதால், கழிவுகள் தண்ணீரில் கலந்து மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இங்கு கடந்த காலங்களில் பசுமையாக காணப்பட்ட வனப்பகுதி, குப்பைமேடாக மாற்றம் பெற்று வருகிறது.
இங்குள்ள பிரச்னை குறித்து மக்கள் சார்பில், மாவட்ட நிர்வாகம் உட்பட அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட்டும் உரிய பலனில்லை. தற்போது, டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களை பரப்பி வரும் கொசுக்களை ஒழிக்க, அனைத்து அரசு துறைகள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த பகுதியில் சுகாதார சீர்கேட்டை தீர்க்க இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இப்பகுதி மக்கள் கூறுகையில், 'வனம், வனவிலங்குகள், மனிதர்கள், கால்நடைகள், சுற்றுச்சூழல் என பல்வேறு வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த குப்பை கழிவுகளை கொட்ட தனியாக இடம் ஒதுக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும்' என்றனர்.
பந்தலுார் தாசில்தார் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், ''நெலாக்கோட்டை ஊராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை கொட்ட, அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அங்கு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளவும், அப்பகுதியில் தொடரும் சுகாதார பாதிப்புக்கு தீர்வு காணவும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

மூலக்கதை