குப்பைக்கிடங்கை அகற்ற இரவுப் பகலாகப் போராடும் மக்கள்! கண்டுகொள்ளாத கலெக்டர்

விகடன்  விகடன்
குப்பைக்கிடங்கை அகற்ற இரவுப் பகலாகப் போராடும் மக்கள்! கண்டுகொள்ளாத கலெக்டர்

தேவகோட்டை ரஸ்தா அருகேயுள்ள குப்பைக்கிடங்கை அகற்றக்கோரி பொதுமக்கள் இரவு பகலாக இரண்டாவது நாள் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். குப்பைக் கிடங்குக்கு அருகில் உட்கார்ந்து போராடி வரும் பொதுமக்கள் அங்கேயே சமையல் செய்து சாப்பிடவும் தயாராகி வருகிறார்கள்.

’சிவகங்கை மாவட்டம் காரைக்குடி - தேவகோட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ள காரைக்குடி நகராட்சி குப்பைக் கிடங்குகளால் துர்நாற்றம், டெங்குக் கொசுக்களின் பிறப்பிடம் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்தக் குப்பைக் கிடங்குகளை காலி செய்யச் சொல்லி பதினைந்து ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். ஆனால் எங்களுக்கு விடிவுகாலம் இன்னும் வரவில்லை. அதனால்தான் சாலை மறியல், மனிதச் சங்கிலி என ஈடுபட்டோம். எங்களுக்கு ஒரு முடிவு தெரியாமல் இந்தப் போராட்டத்தைக் கைவிட மாட்டோம்’ என்று நம்மிடம் பேச ஆரம்பித்தார் பாண்டிமீனாள்.

அவர் மேலும் கூறுகையில், ‘ஆதிதிராவிடர்களுக்கான பள்ளிக்கூடம் இங்கே இருந்தது. அந்த இடத்தின் அருகில் குப்பைகளை மூன்று அடி  மட்டும்தான் கொட்டுவோம் என்று சொன்னார்கள் காரைக்குடி நகராட்சி அதிகாரிகள். 2001-ம் ஆண்டிலிருந்து குப்பைகளைக் குவிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எங்களுக்கான பள்ளிக்கூடமும் இல்லாமல் போய்விட்டது. இந்தக் குப்பைகளால் டெங்குக் கொசு கடித்து மூன்று பேர் இறந்து விட்டார்கள். காரைக்குடி நகராட்சி குப்பை மட்டுமல்லாமல், தேவகோட்டை நகராட்சியிலிருந்து குப்பையை இங்கே கொண்டுவந்து கொட்டுறாங்க. இதுவரைக்கும் 15 கலெக்டர், நகராட்சி கமிஷனர் எல்லாரும் நடவடிக்கை எடுக்குறோம்னு சொன்னாங்க இன்னைக்கு வரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போராட்டம் பத்தி கேள்விப்பட்டு தேவகோட்டை சப்-கலெக்டர் வந்தாங்க. அவுங்க கிட்ட நாங்க சொன்ன ஒரே பதில், காரைக்குடிக்கான பாதாளச் சாக்கடைக் கழிவு நீரேற்று நிலையத்தை இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள். அதையும் சேர்த்து அகற்ற வேண்டும். இல்லையென்றால் எங்கள் போராட்டம் எத்தனை நாள்கள் ஆனாலும் இரவுப் பகலாக இங்கேயே தொடரும்' என்றார். 

மூலக்கதை