மியான்மருடன் இன்று மோதவுள்ள நிலையில் இந்திய கால்பந்து அணி பயிற்சியாளர் வீரர்கள் இடையே பிரச்னை?

தமிழ் முரசு  தமிழ் முரசு
மியான்மருடன் இன்று மோதவுள்ள நிலையில் இந்திய கால்பந்து அணி பயிற்சியாளர் வீரர்கள் இடையே பிரச்னை?

கோவா: ஏஎப்சி (ஆசிய கால்பந்து கூட்டமைப்பு) ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2019ம் ஆண்டு ஜனவரி 5 முதல் பிப்ரவரி 1 வரை, ஐக்கிய அரபு எமீரகத்தில் நடைபெறுகிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கோவா நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் தகுதி சுற்று போட்டி ஒன்றில், இந்தியா-மியான்மர் அணிகள் மோதுகின்றன.

ஆனால் இந்திய அணி ஏற்கனவே ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்று விட்டது.

எனினும் மியான்மரை எளிதாக எடுத்து கொள்ள மாட்டோம் என இந்திய கேப்டன் சுனில் சேத்ரி கூறியுள்ளார். இதனிடையே பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் மீது சில வீரர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், அவரை நீக்க விரும்புவதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைனுக்கு எதிராக அணியில் பிளவு ஏற்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தியை கேப்டன் சுனில் சேத்ரி மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘’அதைப்பற்றி ஏதாவது தெரிந்திருந்தால்தான் என்னால் கருத்து தெரிவிக்க முடியும்.

இப்படி ஒரு செய்தி வெளியானபோது பலர் எனக்கு போன் செய்தனர். அதைப்பற்றி பேச விருப்பம் இல்லாததால், நான் அந்த அழைப்புகளை எடுக்கவில்லை.

ஏனெனில் இந்த செய்தி உண்மை இல்லை’’ என்றார்.

அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎப்எப்) பொது செயலாளர் குஷால் தாசும் கூட, பயிற்சியாளரை நீக்கும் கேள்விக்கே இடமில்லை என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

.

மூலக்கதை