ஆசியான் மாநாடில் ஜப்பான், ஆஸ்திரேலிய பிரதமர்களுடன் மோடி சந்திப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆசியான் மாநாடில் ஜப்பான், ஆஸ்திரேலிய பிரதமர்களுடன் மோடி சந்திப்பு

மணிலா: ஆசியான் மாநாடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்பை, பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். இருநாடுகள் இடையேயான உறவு, தீவிரவாத தடுப்பு, பாதுகாப்பு அம்சங்கள், தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆசியாவின் நலனுக்காக இருநாடுகளும் இணைந்து செயல்படுவது அவசியம் என டிரம்ப்பிடம், மோடி வலியுறுத்தினார்.
சமீபகாலமாக, இந்தியாவை வெகுவாக பாராட்டி வரும் டிரம்புக்கு நன்றி தெரிவித்ததாக மோடி கூறியுள்ளார். இந்தியாவின் செயல்பாடுகள் நல்ல முறையில் இருப்பதாகவும், அதற்கு மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் டிரம்ப் கூறினார்.

ஆசிய பிராந்தியத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆசியான் மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், ஜப்பான், ஆஸ்திரேலியா, வியட்நாம் ஆகிய நாடுகளை சேர்ந்த பிரதமர்களை இன்று மோடி சந்தித்து பேசினார்.

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே உடனான சந்திப்பின்போது, இந்தியா, ஜப்பான் இடையேயான நட்பு, தீவிரவாதம் உள்ளிட்ட பிரச்னைகளில் இருவரும் இணைந்து செயல்படுவது  குறித்து விவாதிக்கப்பட்டது. நம்பகத்தன்மையுள்ள நட்பு நாடு இந்தியா என்று ஜப்பான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதேபோல், வியட்நாம் பிரதமர் குயென் சுவாங்கை, மோடி சந்தித்தார். வர்த்தகம் உள்ளிட்டவற்றில் இந்தியா, வியட்நாம் இடையே நீண்டகாலம் நட்பு உள்ளதாகவும், இதுகுறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகவும் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லை, மோடி சந்தித்து பேசினார். இருநாடுகள் இடையேயான நல்லுறவு, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆசிய மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மட்டுமின்றி ஜப்பான், ஆஸ்திரேலியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

.

மூலக்கதை