‘ஒருமுறை கூட வெற்றி பெறாதது துரதிருஷ்டம்’ இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியை வெல்ல ஆர்வமாக உள்ளோம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘ஒருமுறை கூட வெற்றி பெறாதது துரதிருஷ்டம்’ இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியை வெல்ல ஆர்வமாக உள்ளோம்

கொல்கத்தா: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், வரும் 16ம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து இலங்கை பந்து வீச்சு பயிற்சியாளர் ருமேஷ் ரத்நாயகே கூறுகையில், ‘’இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக விரிவான யுக்திகளை தயார் செய்துள்ளோம். ஆனால் களத்தில் அவற்றை சரியாக செயல்படுத்த வேண்டும்.

இது சவாலானது. இந்திய கேப்டன் விராட் கோஹ்லிக்கு மட்டும் நாங்கள் திட்டங்களை வகுக்கவில்லை.

ஒவ்வொரு இந்திய வீரருக்கு எதிராகவும் தனித்தனி திட்டங்களுடன் வந்துள்ளோம். இந்த திட்டங்கள் பலன் அளிக்கும் என நம்புகிறேன்’’ என்றார்.



 2009ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இலங்கை விளையாடவுள்ளது. ஆனால் இந்திய மண்ணில் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட இலங்கை வென்றதில்லை.

1982-2017 வரை இந்தியாவில் நடைபெற்ற 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை, 10 ேபாட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 7 போட்டிகளில் டிரா செய்துள்ளது.   இது குறித்து ருமேஷ் ரத்நாயகே கூறுகையில், ‘’இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியை கூட நாங்கள் வெல்லாதது துரதிருஷ்டவசமானது.

இங்கே டெஸ்ட் போட்டியை வெல்ல ஆர்வமாக உள்ளோம். இதை ஒரு சவாலாக எடுத்து கொண்டுள்ளோம்.

8 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறோம். இலங்கை அணியில் பல புதிய வீரர்கள் உள்ளனர்.

அவர்களுக்கு இந்தியா புதிது. சைனாமேன் பவுலர்களான இந்தியாவின் குல்தீப் யாதவ், இலங்கையின் லக்‌ஷன் சண்டகன் ஆகியோர் சற்று ஒரே மாதிரியானவர்கள்.

பிராட் ஹோக்கிடம் இருந்து பாடம் கற்றவர்கள். ஆனால் லக்‌ஷன் சண்டகன் இன்னும் சற்று முன்னேற்றம் காண வேண்டும்.



ஒரு முறை நம்பிக்கையை பெற்று விட்டால், அவர் அசத்தலாக பந்து வீசுவார். ஆனால் முதல் டெஸ்ட்டில் அவர் விளையாடுவாரா? இல்லையா? என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது.

கூடுதல் சுழற்பந்து வீச்சாளர் தேவையா? இல்லையா? என்பது பற்றி, போட்டிக்கு ஒரு நாள் முன்புதான் முடிவு எடுப்போம்’’ என்றார்.   இலங்கை அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் காயம் காரணமாக, சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு எமீரகத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. காயம் குணமடைந்ததால், இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ் இடம் பிடித்துள்ளார்.

இது குறித்து ருமேஷ் ரத்நாயகே கூறுகையில், ‘’ஏஞ்சலோ மேத்யூஸை பேட்ஸ்மேனாக பயன்படுத்துவோம். ஆல் ரவுண்டர்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய எங்களிடம் டசூன் சனாகா, தனஞ்ஜெயா டி சில்வா, ரோஷன் சில்வா ஆகியோர் உள்ளனர்.



எனவே ஏஞ்சலோ மேத்யூஸ் பந்து வீசுவார் என நான் நினைக்கவில்லை. அவரை ஒரு நாள் போட்டிகளில் மட்டும் பந்து வீச வைப்பது குறித்து யோசித்து வருகிறோம்’’ என்றார்.   இலங்கை அணிக்காக விளையாடிய முன்னாள் வீரரான ருமேஷ் ரத்நாயகே மேலும் கூறுகையில், ‘’இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்து வீச்சு ஆலோசகர் பரத் ஆருண் ஆகியோருக்கு எதிராக விளையாடியுள்ளேன்.

16-17 வயதில் இருந்து எங்களில் ஒருவருக்கொருவர் அறிமுகம் உள்ளது.

போட்டிகளுக்கு பிறகு அவர்களை நிச்சயமாக சந்திப்பேன்’’ என்றார்.

.

மூலக்கதை