இந்தியாவை வீழ்த்துவது கடினமானது: நியூசிலாந்து வீரர் சாண்ட்னர் கருத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாவை வீழ்த்துவது கடினமானது: நியூசிலாந்து வீரர் சாண்ட்னர் கருத்து

திருவனந்தபுரம்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. முதலில் நடைபெற்ற ஒரு நாள் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றியது.

இதன்பின் நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன. தொடரை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி, திருவனந்தபுரம் கிரீன் பீல்டு சர்வதேச மைதானத்தில், இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

சமீப காலத்தில், இந்தியாவிடம் எதிர்ப்பு காட்டாமல் எளிதில் சரண் அடைந்த மற்ற அணிகளை போல் அல்லாமல், நியூசிலாந்து கடும் சவால் அளித்து வருவதாலும், சொந்த மண்ணில் தொடரை இழந்து விடக்கூடாது என இந்திய வீரர்கள் தீவிரமாக விளையாடுவார்கள் என்பதாலும், ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 சொந்த மண்ணில் தொடரை இழந்து விடக்கூடிய அபாயம் நிலவுவதால், இந்திய வீரர்கள் மத்தியில் உள்ள அழுத்தத்தை பயன்படுத்தி நியூசிலாந்து தொடரை கைப்பற்றுமா? என்ற கேள்விக்கு, நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் பதிலளிக்கையில், ‘’இந்தியாவை வீழ்த்துவது கடினமானது.

மிக நீண்ட நாட்களாக இந்தியா மிக சிறப்பாக விளையாடி வருகிறது. கடைசி 2 தொடர்களை நாங்கள் டிசைடருக்கு (தொடரை கைப்பற்றும் அணியை தீர்மானிக்கும் போட்டி) கொண்டு சென்றுள்ளோம்.

இரு அணிகளுமே வெற்றி பெறத்தான் முயலும். கான்பூரிலும் கூட இந்தியா அழுத்தத்தின் கீழ் சிறப்பாகதான் விளையாடியது (ஒரு நாள் தொடரில் 1-1 என சமநிலை நிலவிய சூழ்நிலையில் கான்பூரில் நடைபெற்ற 3வது போட்டியில் வென்று இந்தியா தொடரை கைப்பற்றியது).

சிறப்பாக விளையாடி டி20 தொடரை கைப்பற்ற நாங்களும் முயல்வோம்’’ என்றார்.

.

மூலக்கதை