பிரதமர் மோடியை சந்திக்காததற்கு வருத்தம் தெரிவித்தார் பிபா தலைவர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரதமர் மோடியை சந்திக்காததற்கு வருத்தம் தெரிவித்தார் பிபா தலைவர்

ஜுரிச்: பிபா யு-17 உலக கோப்பை கால்பந்து தொடர், கடந்த அக்டோபர் 6-28ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற்றது. இதில், இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

இந்த தொடரை வெற்றிகரமாக நடத்தியதற்கு வாழ்த்து தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிபா தலைவர் ஜியானி இன்பான்டினோ கடிதம் எழுதியுள்ளார். அக்டோபர் 6ம் தேதி புது டெல்லியில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடியை சந்திக்க முடியாததற்கு ஜியானி இன்பான்டினோ வருத்தமும் தெரிவித்துள்ளார்.

கடிதத்தில், ‘’பல மறக்க முடியாத நினைவுகளுடன் பிபா பிரதிநிதிகள் குழு ஜுரிச் திரும்பி விட்டது (பிபா அமைப்பின் தலைமையகம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் உள்ளது). பிபா கவுன்சில் மீட்டிங் மற்றும் இறுதி கட்ட போட்டிகளுக்காக கொல்கத்தாவில் தங்கியிருந்தபோது எங்களுக்கு பல புதிய நட்புகள் கிடைத்தது.

உங்கள் நாடு பிபா யு-17 உலக கோப்பையை வெற்றிகரமாக நடத்தியதற்கு, ஆற்றிய பணிகளுக்காக உங்கள் அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

புது டெல்லி, நவி மும்பை, கோவா, கொச்சி, கவுஹாத்தி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் போட்டிகளை வெற்றிகரமாக நடத்த உதவிய உங்கள் அரசு, உள்ளூர் போட்டி ஏற்பாட்டு குழு மற்றும் கடினமாக உழைத்த அனைவருக்கும் எனது நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.

அற்புதமான மற்றும் மறக்க முடியாத தொடருக்கு, அவர்கள் அளித்த பங்களிப்பு மகத்தானது. ஏஐஎப்எப்-ன் (அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு) பணியும் பாராட்டுக்குரியது. இதர முக்கியமான பணிகள் காரணமாக, துரதிருஷ்டவசமாக புது டெல்லி தொடக்க விழாவில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை மற்றும் உங்களை சந்திக்க முடியவில்லை.

இதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

எனினும் உங்கள் நாட்டில் கால்பந்தை மேம்படுத்துவது தொடர்பான திட்டங்களை பரிமாறிக்கொள்ள எதிர்காலத்தில் நாம் சந்திப்போம் என நம்புகிறேன்’’ என கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை