அமெரிக்காவில் பயங்கரம் மினி லாரியால் பாதசாரிகள் மீது மோதி 8 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்காவில் பயங்கரம் மினி லாரியால் பாதசாரிகள் மீது மோதி 8 பேர் பலி

நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மினி லாரியால் பாதசாரிகள் மீது மோதி 8 பேர் பலியாகினர். இதை ஓட்டி சென்றவர் தீவிரவாதி என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் லோயர் மன்ஹாட்டன் என்ற இடத்தில் உலக வர்த்தக மையம் அமைந்துள்ளது. இப்பகுதியில் மர்ம நபர் ஒருவர் மினிலாரியை பாதசாரிகள் மீது மோதி தாறுமாறாக ஓட்டியுள்ளார்.

நடை பாதைக்குள் புகுந்து கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட இந்த கொலை வெறி தாக்குதலில், எதிரில் நடந்து வந்தவர்கள், சாலையில் நடந்து சென்றவர்கள், பள்ளி பேருந்து ஆகியவற்றின் மீது இந்த மினி லாரி மோதியது. இந்த சம்பவத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 24 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மினி லாரியை ஓட்டி வந்த ஆசாமி லாரியை விட்டு இறங்கி கையில் போலி துப்பாக்கியுடன் பொது மக்களை மிரட்டியுள்ளார்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆசாமியை துப்பாக்கியால் சுட்டு சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதில் ஆசாமிக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது. அவர் 29 வயது மட்டுமே நிரம்பிய வாலிபர் என்பது தெரியவந்துள்ளது.

ஆனால் ஆசாமி குறித்த பிற தகவல்களை வெளியிட காவல்துறை மறுத்து விட்டது. இதன் காரணமாக ஆசாமி தீவிரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மேலும் பிடிபட்ட ஆசாமி, இறந்தவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்யலாம் என்றும் போலீசாரிடம் கூறியுள்ளார். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 8 பேர் அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒருவர் பெல்ஜியத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

துக்கத்தில் பங்கேற்பதோடு காயமடைந்தோர் விரைவில் நலம்பெற பிரார்த்தனை செய்வதாக மோடி கூறியுள்ளார்.

.

மூலக்கதை