ஸ்பெயினில் இருந்து பிரிந்த கேட்டலோனியா நாடாளுமன்றம் கலைப்பு: பிரதமர் மரியானோ அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஸ்பெயினில் இருந்து பிரிந்த கேட்டலோனியா நாடாளுமன்றம் கலைப்பு: பிரதமர் மரியானோ அதிரடி

பார்சிலோனா: ஸ்பெயின் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிந்து சென்ற கேட்டலோனியா நாடாளுமன்றத்தை கலைத்து ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.   ஐரோப்பிய நாடான ஸ்பெயின் கட்டுப்பாட்டில் உள்ளது கேட்டலோனியா மாகாணம். ஸ்பெயினின் பொருளாதார வளம் ெகாண்ட இம்மாகாணம், தனி நாடாளுமன்றத்துடன் செயல்படும் தன்னாட்சி அதிகாரம் கொண்டது.

ஸ்பெயினில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க கோரி, கோட்டலோனியா மக்கள் நீண்டகாலமாக போராடி வந்தனர். இதுதொடர்பாக சமீபத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

23 லட்சம் பேரில், சுமார் 90 சதவீதம் பேர் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த வாக்கெடுப்பை ஸ்பெயின் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும், தனி நாடாக அறிவிக்க கோரி கேட்டலோனியா பிரிவினைவாதிகள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர்.   கேட்டலோனியாவிடம் இருந்து தன்னாட்சி அதிகாரத்தை பறித்து, தங்களின் நேரடி அதிகார கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ஸ்பெயின் அரசும் முயற்சித்தது. இதை முறியடிக்க, கேட்டலோனியா நாடாளுமன்றத்தில் தனிநாடு மீதான தீர்மானம் நேற்று கொண்டு வரப்பட்டது.

135 உறுப்பினர்கள் கொண்ட அவையில், 70 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். 10 பேர் எதிராக வாக்களித்தனர்.

பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா பிரிந்து தனி நாடாகி விட்டதாக கேட்டலோனியா நாடாளுமன்றம் அறிவித்தது.

இதை ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் ஏற்கவில்லை.

உடனடியாக அமைச்சரவையை கூட்டிய பிரதமர், கேட்டலோனியா நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார். இதையடுத்து, ஸ்பெயின் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கேட்டலோனியா வந்துள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், அங்கு டிசம்பர் 21ல் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிவினைவாதிகளின் முக்கிய பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் இருந்து பிரிந்து சென்ற சில மணி நேரத்துக்குள்ளேயே கேட்டலோனியா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை