அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் இன்று அல்லது நாளையுடன் முடிவுக்கு வரும் சாத்தியம்!

என் தமிழ்  என் தமிழ்
அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் இன்று அல்லது நாளையுடன் முடிவுக்கு வரும் சாத்தியம்!

தமிழ் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் நாளையுடன் நிறைவுக்கு வரும் சாத்தியம் உள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன், போதைவஸ்த்து கடத்தல் மற்றும் பாரிய குற்றங்களை செய்த கைதிகளுடன் தமிழ் அரசியல் கைதிகள் இனிமேல் தடுத்துவைக்கப்படமாட்டார்கள் என்றும் அதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆளுநர் றெஜினோல்ட் கூரே என்னை தொடர்பு கொண்டு மேற்படி 3 தமிழ் அரசியல் கைதிகளுடைய கோரிக்கையும் இன்று அல்லது நாளை தீர்க்கப்படும் என தனக்கு ஜனாதிபதி அறிவித்திருப்பதாக கூறியுள்ளார். அதேபோல் தமிழ் அரசியல் கைதிகளை சிறைச்சாலைக்குள் உள்ள போதைவஸ்த்து கைதிகள் மற்றும் பாரிய குற்றங்களை செய்த கைதிகளுடன் தடுத்து வைக்க வேண்டாம். அவர்களை தனியாக வைக்க வேண்டும் என ஜனாதிபதியுடனான சந்திப்பில் கேட்டிருந்தோம். அது தொடர்பாகவும் ஆளுநர் எமக்கு கூறியிருக்கிறார். அதாவது எங்களுடைய அந்த கோரிக்கைக்கு அமைவாக தமிழ் அரசியல் கைதிகள் இனிமேல் தனியாக வைக்கப்படுவார்கள். மற்றவர்களுடன் சேர்த்துவைக்கப்படமாட்டார்கள். அதனையும் தனக்கு ஜனாதிபதி கூறியதாகவும் இதற்கான உடனடி நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்திருப்பதாகவும் கூறியிருக்கின்றார்.

இந்நிலையில் கடந்த 29 நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை நடத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று அல்லது நாளை நிறைவுக்கு வரலாம் என நாங்கள் நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை