காடுகளை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்கள் அமுல்படுத்தப்படும். ஜனாதிபதி

என் தமிழ்  என் தமிழ்
காடுகளை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்கள் அமுல்படுத்தப்படும். ஜனாதிபதி

காடுகளை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டின் வனப் பரம்பலைப் பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கம் விசேட அவதானத்துடன் செயற்படுவதுடன், அதற்கான அனைத்து செயற்பாடுகளும் தாமதமின்றி நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஆசிய பசுபிக் வலய நாடுகளின் வனப் பரம்பல் பற்றிய ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய தரைதோற்றங்களில் காடுகள்” எனும் தொனிப்பொருளில் ஆசிய பசுபிக் வலய நாடுகளின் வனப் பரம்பல் பற்றிய ஆணைக்குழுவின் 27வது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமாகியதுடன், எதிர்வரும் 27ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.

காடுகளை முகாமைத்துவம் செய்வதற்கான வழிகாட்டல்களை உருவாக்குதல், வலய ரீதியில் வனப்பரம்பல் மற்றும் புவி அமைவுகளை சீரமைப்பதற்கான வழிமுறைகளை அங்கீகரித்தல், நகர அமைவுகளிற்கேற்ப தாவரங்களின் பரம்பல், உணவு மற்றும் போசணைப் பாதுகாப்பிற்கான வனங்களின் பங்களிப்பு, காடுகளை முகாமை செய்வதற்குரிய புதிய சமூக அணுகுமுறைகள் மற்றும் 2020 ஆம் ஆண்டில் வன வளங்களை மதிப்பீடு செய்தல் போன்ற தலைப்புக்களில் இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

ஆசிய பசுபிக் வலய வனப் பரம்பல் பற்றிய ஆணைக்குழுவின் 34 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் பல்வேறு மட்டத்திலான கண்காணிப்பு நிறுவனங்களின் 300 பிரதிநிதிகளும் இக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி சுற்றாடல் பாதுகாப்பிற்கான பாரிஸ் மாநாட்டில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் உள்ளிட்ட ஏனைய சர்வதேச பிரகடனங்களை உரியவாறு பின்பற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன் தேசிய ரீதியில் அதற்கான செயற்திட்டங்கள் பலவும் அமுல்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக உலக நாடுகளுக்கு நிதியுதவிகளை வழங்கும்போது தமது நாட்டில் வனங்களின் அடர்த்தியை அதிகரிப்பதற்கும் சூழலை பாதுகாப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படும் நாடுகளுக்கு கூடுதல் ஒத்துழைப்பினை வழங்குவதற்கான நடைமுறையொன்றினை சர்வதேச ரீதியில் செயற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது ஆலோசனை வழங்கினார்.

இதனூடாக சுற்றாடலை பாதுகாப்பதற்கு நாடுகள் அதிக அக்கறையுடன் செயற்படுமென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

முன்னொருபோதும் ஏற்படாத வகையில் உலக நாடுகள் பலவும் தற்போது பாரிய காலநிலை மற்றும் வானிலை மாற்றங்களினால் ஏற்படும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதுடன், உலகளாவிய ரீதியில் ஏற்படும் சுற்றாடல் சீர்கேடுகள் காரணமாக மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களினதும் நிலவுகைக்கு இன்று இயற்கையினால் சவால் விடுக்கப்பட்டுள்ளதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் காடுகளின் பாதுகாப்பு தொடர்பாக நடைமுறைப்படுத்தப்படும் செயற்திட்டங்களில் கல்விமான்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட அனைவரது வழிகாட்டல்களும் மிக முக்கிமானவையென இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி சுற்றாடலை பாதுகாக்கும் வகையில் செயற்படும் அரச நிறுவனங்களுக்கு விசேட வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, சுசில் பிரேமஜயந்த, பிரதி அமைச்சர் அநுராத ஜயரட்ன, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் வனப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் நாயகம் ஹிரோட்டோ மிட்சுகி, சர்வதேச விவசாய, வனாந்தர ஆய்வுகள் பற்றியபேரவையின் தலைவர் டோனி சைமன் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகளும், வனப் பாதுகாப்பாளர் நாயகம் எஸ்.ஏ. அனுர சத்துருசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை