'பாரத் நெட்' திட்டம்; ரூ.1,230 கோடி ஒதுக்கியது மத்திய அரசு

தினமலர்  தினமலர்
பாரத் நெட் திட்டம்; ரூ.1,230 கோடி ஒதுக்கியது மத்திய அரசு

சென்னை : தமிழகத்தில், 'பாரத் நெட்' என்ற, கிராம ஊராட்சிகளுக்கான இணைய சேவை திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு, 1,230 கோடி ரூபாய், நிதி ஒதுக்கி உள்ளது.

'பாரத் நெட்':


அனைத்து மாநிலங்களிலும் உள்ள, கிராம ஊராட்சிகளை இணைத்து, அரசின் சேவைகளை, இணையதளம் வழியாக, மக்கள் பெற வசதியாக, 'பாரத் நெட்' என்ற திட்டத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள, 12 ஆயிரத்து, 524 கிராம ஊராட்சிகளும், 'ஆப்டிக்கல் பைபரால்' இணைக்கப்படுகின்றன. அதனால், மக்கள் இணைய தளம் வழியாக, அரசின் சேவைகளை பெற முடியும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்:


இத்திட்டம், மத்திய அரசின் பங்களிப்புடன், 3,000 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 'தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன்' என்ற, தனி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் பங்கு முதலீடாக, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசின் தொலைதொடர்புத் துறை, 'பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட்' நிறுவனம் மற்றும் தமிழக அரசு இடையே, ஏப்ரல், 25ல், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கான திட்ட அறிக்கை, தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, ஆக., 31ல், மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

நிதி ஒதுக்கீடு:


இதற்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய அரசு, 1,230.90 கோடி ரூபாய், நிதி ஒதுக்கி உள்ளது. இதனால், கேபிள், 'டிவி' உள்ளிட்ட, தமிழக அரசின் பல்வேறு சேவைகளை, பொதுமக்கள் இணைய தளம் வழியாக பெற முடியும்.

மூலக்கதை