ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது

தினமலர்  தினமலர்
ரூ.1,500 கோடி வங்கி கடன்; ஏர்  இந்தியா கோருகிறது

புதுடில்லி : அவசர மூலதன செலவுகளை சமாளிக்க, வங்கிகளிடம், 1,500 கோடி ரூபாய் குறுகிய கால கடனை, 'ஏர் - இந்தியா நிறுவனம்' கோரி உள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: அவசர மூலதன தேவைகளை, உடனடியாக பூர்த்தி செய்வதற்காக, 1,500 கோடி ரூபாய் அளவிற்கு, குறுகிய கால கடன் தேவைப்படுகிறது. இதற்கான, 'டெண்டர்' வெளியிடப்பட்டு உள்ளது. இந்த கடனுக்கு, மத்திய அரசு உத்தரவாதம் அளிக்கும். உத்தரவாத காலம், கடன் வழங்கப்பட்ட தேதியில் இருந்து, 2018 ஜூன், 26க்குள்ளாகவோ அல்லது பங்கு விற்பனை முடிவுறும் காலம் வரையிலோ இருக்கும்.

விருப்பமுள்ள வங்கிகள், அளிக்க விரும்பும் கடன் தொகையை குறிப்பிட்டு, உரிய ஆவணங்களை, 26ம் தேதிக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏர் - இந்தியா நிறுவனம், 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி உள்ளது. இழப்பில் உள்ள இந்நிறுவனத்தை விற்க, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், அவசர செலவுகளை சமாளிக்க, ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக, ஏர் - இந்தியா கடன் கோரி உள்ளது.

மூலக்கதை