காற்றில் மாசு அதிகரிப்பு ; ஒரே ஆண்டில் 25 லட்சம் இந்தியர்கள் மரணம்!

விகடன்  விகடன்
காற்றில் மாசு அதிகரிப்பு ; ஒரே ஆண்டில் 25 லட்சம் இந்தியர்கள் மரணம்!

காற்று மாசு காரணமாக 2015-ம் ஆண்டு 25 லட்சம் மக்கள் இந்தியாவில் இறந்துள்ளனர். இந்தப் பட்டியலில் உலகளவில்  இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.

அண்மையில் பட்டினி நாடுகள் பட்டியலில் 100-வது இடத்தை இந்தியா பெற்றது. அடுத்ததாக, Lancet Commission on Pollution and Health நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. பட்டியலில் சீனாவுக்கு இரண்டாமிடம். இதே காலக்கட்டத்தில் சீனாவில் 18 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். 

சர்வதேச அளவில் 9 கோடி பேர் இறந்துள்ளனர். எய்ட்ஸால் இறப்பவர்களைவிட இது மூன்று மடங்கு அதிகம். வளர்ந்து வரும் நாடுகளில் ஆறில் ஒருவர் காற்று மாசு காரணமாக ஏற்படும் நோய்களால் மரணத்தைச் சந்திக்கின்றனர்.  காற்றில் மாசு அதிகரிப்பதால், சுவாச நோய்கள், இதய நோய்கள், நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். 

கட்டுமானப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், செங்கற்சூளை பணியாளர்கள், கரி, மரங்கள் கொண்டு சமையலில் ஈடுபடும்  பெண்களை சுவாசம் சம்பந்தமான நோய்கள் அதிகம் பாதிக்கிறது. இந்தியாவில் டெல்லியில்தான் காற்றில் அதிகளவு மாசு உள்ளது. இதனால், தீபாவளி பண்டிகையையொட்டி,  டெல்லியில் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது. 

டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள மாசு அளவீடுகள் நம்மை அச்சுறுத்துகின்றது. டெல்லியில் சில பகுதிகளில் காற்றில் தூசு அளவு  2.5 பிஎம்முக்கு 878 மைக்ரோ கிராமும் 10 பிஎம்முக்கு  1,179 மைக்ரோ கிராம் ஆக உள்ளது. பொதுவாக 2 பிஎம்முக்கு 60 முதல் 100 மைக்ரோ கிராமுக்குள் இருக்க வேண்டும். இது 10 மடங்கு அதிகமாக உள்ளது. 

டெல்லியில் மந்தீர் மார்க் , ஆர் கே புரம், ஆனந்தவிஹார் காற்றில் அதிக மாசு கலந்துள்ள பகுதிகள். 

மூலக்கதை