நாகை பொறையாரில் அரசு பஸ் டெப்போ இடிந்து பயங்கரம் : டிரைவர், கண்டக்டர் 8 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாகை பொறையாரில் அரசு பஸ் டெப்போ இடிந்து பயங்கரம் : டிரைவர், கண்டக்டர் 8 பேர் பலி

தரங்கம்பாடி : நாகை மாவட்டம் பொறையார் அரசு பஸ் டெப்போவில் ஓய்வறை மேல்தளம் இடிந்து விழுந்ததில், டிரைவர்கள் 7 பேர், கண்டக்டர் ஒருவர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

நாகை மாவட்டம், பொறையாரில் அரசு போக்குவரத்து கழக டெப்போ செயல்படுகிறது. இந்த டெப்போவில் இருந்து 32 பஸ்கள் இயக்கப்படுகிறது.   பஸ் பாடி கட்டும் பிரிவும் இங்கு செயல்படுகிறது.

டெப்போவில் மேலாளர் உள்பட180 பேர் பணியாற்றுகின்றனர். டெப்போவுக்குள் டிரைவர், கண்டக்டர்கள் ஓய்வறை உள்ளது.

கட்டிடம் தரைத்தளம் மற்றும் ஒரு மாடியுடன் கூடியது. ஓய்வறையில் நள்ளிரவு பணி முடித்து வந்தவர்கள் மற்றும் அதிகாலை 3 மணி, 4 மணிக்கு பணிக்கு வரவேண்டியவர்கள் தங்கி இருப்பார்கள்.

இந்தக் கட்டிடம் 1943ல் கட்டப்பட்ட பழைய கட்டிடம். பழமையான இக்கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது இடித்து விட்டு வேறு கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று போக்குவரத்து ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நேற்று இரவு 40 பேர் இங்கு தங்கி இருந்தனர். 20க்கும் மேற்பட்டவர்கள் முதல் தளத்தில் தூங்கிகொண்டிருந்தனர்.

அதிகாலை 4 மணிக்கு திடீரென மாடி கட்டிடம் இடித்து விழுந்தது. இதில் மாடியில் தூங்கிகொண்டிருந்த டிரைவர்கள் பிரபாகரன்(50), அவரது தம்பி பாலு(45), மணிவண்ணன், தனபால், முனியப்பன்(42), சந்திரசேகரன்,  அன்பரசன் மற்றும் கண்டக்டர் கீவளூர் ராமலிங்கம் ஆகிய 8 பேர் அதே இடத்தில் இறந்தனர்.

கண்டக்டர்  வெங்கடேசன்(48), டிரைவர்கள் செந்தில்குமார், பிரேம்குமார்(40) ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து போலீசாரும்,  தீயணைக்கும்படையினரும் விரைந்து வந்து  மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பொக்லைன் வரவழைக்கப்பட்டு இடிபாடுகள் அகற்றப்பட்டன. இறந்தவர்களின் உடல்களை மீட்டு பொறையார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை  காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நாகை கலெக்டர்  சுரேஷ்குமார், டிஐஜி லோகநாதன் எஸ். பி. க்கள் மயில்வாகனன், செந்தில்குமார் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.   அதற்குள் பஸ் ஊழியர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள், தொழிற்சங்கத்தினர் டெப்போ முன் திரண்டு, மேலாளரை கைது செய் என கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

டெப்போவுக்குள் ஆவேசத்துடன் புகுந்தனர். அங்கு கலெக்டர் இருப்பதை பார்த்த பொதுமக்கள் கலெக்டர் காரை முற்றுகையிட்டனர்.

இதை அறிந்த கலெக்டர்  பூம்புகார் எம். எல். ஏ. பவுன்ராஜ் காரில் ஏறி வெளியே சென்றார்.   சிறிது நேரம் கழித்து தான் கலெக்டர் வெளியே சென்றது போக்குவரத்து ஊழியர்களுக்குத் தெரியவந்தது.

தொடர்ந்து போராட்டம் நடைபெறுவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

அமைச்சர் மணியன் திரும்பி சென்றார்

அரசு பஸ் டெப்போ இடிந்து 8 பேர் பலியான செய்தி அறிந்ததும் நாகை மாவட்ட அமைச்சரான ஓ. எஸ்.

மணியன் இன்று காலை 8 மணி அளவில்  பொறையார் டெப்போவுக்கு வந்தார். அங்கு 500க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டிருந்தனர்.   அவர்கள் ஆவேசத்துடன் அரசுக்கும், டெப்போ நிர்வாகத்துக்கும் எதிராக கோஷமிட்டபடி  இருந்தனர்.

அமைச்சர் காரையும் அவர்கள் முற்றுகையிட்டனர். இதைபார்த்த அமைச்சர் ஓ.

எஸ். மணியன் டெப்போவுக்குள் செல்லாமல் வெளியே நின்றபடியே  இடிபாடுகளை பார்த்து விட்டு வேகமாக திரும்பி போய் விட்டார்.



தப்பிய டிரைவர் கண்ணீர்

கட்டிடம் இடிந்து விழுந்து காயமடைந்து காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்  டிரைவர் பிரேம்குமார்(40). இவர் கூறியதாவது:
 இரவில் 11 மணிக்கு டூட்டி முடிந்து வந்து டெப்போவில் படுத்திருந்தேன்.

அயர்ந்து தூங்கிவிட்டேன். அதிகாலையில்  பயங்கர சத்தம் கேட்டது.

ஆனால் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. இடிபாடுகளில் சிக்கி மயங்கி விட்டேன்.

ஆஸ்பத்திரிக்கு வந்ததும் தான் மயக்கம் தெளிந்தது. நாங்கள் தூங்கி கொண்டிருந்த கட்டிடம்  இடிந்து விழுந்து விட்டது என்று ஆஸ்பத்திரிக்கு வந்த பிறகு தான் தெரியும்.

இந்த கட்டிடம் மிகவும் பழமையானது. அதை மாற்றி புதிய கட்டிடம் கட்டித்தாருங்கள் என பலமுறை சொல்லி இருந்தோம்.

ஆனால் போக்குவரத்து நிர்வாகம் எங்கள் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. இதை சரி செய்து கொடுத்திருந்தால் 8 பேர் உயிரை காப்பாற்றி இருக்கலாம்.

இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார்.

பஸ் ஊழியர்கள் ஆவேசம்

விபத்தில்  இறந்த 8 பேரின் உடல்களும் பொறையார் அரசு அஸ்பத்திரி மார்ச்சுவரியில்  வைக்கப்பட்டு இருந்தது. தொழிலாளர்கள், மற்றும் பொதுமக்கள் கொந்தளிப்புடன்  இருந்ததால் அதிர்ச்சியடைந்த மாவட்ட நிர்வாகம், மற்றும் போக்குவரத்து கழக  அதிகாரிகள், இறந்தவர்களின் உடல்களை உடனடியாக போஸ்ட்மார்ட்டம் செய்து அனுப்ப  ஏற்பாடு செய்தனர்.   காலை 8. 30 மணிக்கெல்லாம் 8 உடல்களும் போஸ்ட்மார்டம்  செய்யப்பட்டதாக கூறி உடல்களை வெளியே எடுத்து செல்ல உறவினர்களை  நிர்ப்பந்தப்படுத்தினர்.

ஆனால் பஸ் ஊழியர்கள், அவர்களது உறவினர்கள்  உடல்களை வெளியே எடுத்து செல்ல விடாமல் தடுத்தனர். ஆஸ்பத்திரி மெயின்  கேட்டில் மறியல் செய்தனர்.   இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி  நிவாரணம் அறிவிக்க வேண்டும்.

முதல்வர் அறிவித்தால் தான் உடல்களை வெளியே  கொண்டு செல்ல விடுவோம் என்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து துறை அமைச்சர் பேட்டி

8 பேர் பலியான சம்பவம்  குறித்து அறிந்த போக்குவரத்து துறை அமைச்சர்  எம். ஆர்.

விஜயபாஸ்கர், இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின்  கவனத்துக்கு கொண்டு சென்றார். பின்னர் அவர் கூறியதாவது: போக்குவரத்து  கழகத்துக்கு சொந்தமான கட்டிடங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும்.

பழைய  கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை  எடுக்கப்படும். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கும், காயமடைந்தவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை