திருத்தணி, திருப்போரூர் முருகன் கோயில்களில் இன்று கந்தசஷ்டி விழா கொடியேற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருத்தணி, திருப்போரூர் முருகன் கோயில்களில் இன்று கந்தசஷ்டி விழா கொடியேற்றம்

திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் 6 நாள் கந்தசஷ்டி விழா வெகுசிறப்பாக நடைபெறும். இந்தாண்டுக்கான கந்தசஷ்டி விழா இன்று காலை 8. 30 மணிக்கு கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.

இக்கோயிலில் கொடியேற்றத்தை முன்னிட்டு வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத, கோயில் முன்னே அமைந்துள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். இன்று மாலை பச்சைக்கிளி வாகனத்திலும், நாளை ஆட்டுக்கிடா வாகனத்திலும், 22-ம் தேதி புருஷாமிருக வாகனத்திலும் முருகப்பெருமானின் வீதியுலா நடைபெறுகிறது.

இதையடுத்து 4-வது நாளான திங்களன்று பல்லக்கு உற்சவமும் பூத வாகனத்தில் வீதியுலாவும், 24-ம் தேதி செவ்வாய்க்கிழமை வெள்ளி அன்ன வாகனத்தில் முருகனின் வீதியுலா நடைபெற உள்ளது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 25-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

இதையடுத்து அன்றிரவு தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலாவும், மறுநாள் காலை 6 மணிக்கு முருகனின் திருக்கல்யாண உற்சவமும், யானை வாகனத்தில் வீதியுலாவும் நடைபெற உள்ளது.

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் இன்று காலை முதல் கந்தசஷ்டி திருவிழா துவங்கியது. இன்று துவங்கும் கந்தசஷ்டி விழா வரும் 26-ம் தேதிவரை நடைபெறுகிறது.

முதல் நாளான இன்று அதிகாலை மூலவர் சுப்பிரமணியருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெற்றன. பின்னர் காலை 10 மணியளவில் மூலவருக்கு புஷ்ப அலங்காரங்கள் உட்பட பல்வேறு ஆராதனைகள் நடந்தன.

இதையடுத்து மாலை 5 மணியளவில் பிரபல நாதஸ்தர வித்வான்கள் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2-ம் நாளான நாளை காலை மூலவருக்கு பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பல்வேறு பக்தி சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

3-ம் நாள் ஞாயிறன்று காலை மூலவருக்கு தங்க கவச அலங்காரம், 4-ம் நாளில் மூலவர் திருவாபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு பரதநாட்டியம் மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

5-ம் நாளான செவ்வாயன்று மூலவருக்கு வெள்ளி கவச அலங்காரம், 6-வது நாளன்று முருகனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெறுகிறது. பின்னர் மாலை 5 மணியளவில் முருகனுக்கு பல்வகை மலர்களால் புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து வரும் 26-ம் தேதியன்று முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை காலை மற்றும் மாலையில் வில்வத்தால் லட்சார்ச்சனையும் தேவார பாராயண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

.

மூலக்கதை