கனமழைக்கு வாய்ப்பில்லை : வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கனமழைக்கு வாய்ப்பில்லை : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை : தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இதனால்,  மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்கிறது.

கேரளா, கர்நாடகாவிலும் பருவமழை தொடர்ந்து பெய்கிறது. இதற்கிடையில், தமிழகம், ஆந்திரா இடையே கடந்த வாரம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது.

இது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி மத்திய வங்க கடலில் ஒடிசா அருகே மையம் கொண்டது. படிப்படியாக அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இந்நிலையில், மத்திய வங்க கடலில் நிலை கொண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம் அடைந்ததால் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு ஏற்பட்டது. நேற்று பிற்பகல் நிலவரப்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசாவின் சந்த்பாலிக்கு தெற்கே 390 கிமீ தூரத்திலும் புரிக்கு தென்கிழக்கே 280 கிமீ தூரத்திலும் மையம் கொண்டிருந்தது.

இது மணிக்கு 16 கிமீ வேகத்தில் ஒடிசா நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனால் ஒடிசா, ஆந்திராவின் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அம்மாநிலங்களில் துரிதப்படுத்தப்பட்டிருந்தன.

இதற்கிடையில், அண்டை மாநிலத்தில் புயல் எச்சரிக்கை விடப்பட்டிருந்தால் தமிழகம் நேற்று உஷார்படுத்தப்பட்டது. அதன்படி, நேற்று சென்னை, பாம்பன், எண்ணூர் காமராஜர், நாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்களில் 1ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இருப்பினும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் வராது; மழை குறையவே அதிகம் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெல்ல நகர்ந்து இன்று அதிகாலை 5. 30 மணி அளவில் சந்த்பாலியின் மேற்கே 25 கிமீ தூரத்தில் மையம் கொண்டிருந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், ஓடிசா கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், அசாம், மேகாலயாவில் கனமழை பெய்யும்.

அதேசமயம், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை