ஓராண்டு இடைவெளிக்கு பிறகு முரசொலி அலுவலகம் வந்தார் கருணாநிதி : தொண்டர்கள் உற்சாகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஓராண்டு இடைவெளிக்கு பிறகு முரசொலி அலுவலகம் வந்தார் கருணாநிதி : தொண்டர்கள் உற்சாகம்

சென்னை : ஓராண்டு இடைவெளிக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த திமுக தலைவர் கருணாநிதி, நேற்று முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார். இதனை கண்ட திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நல குறைவு காரணமாக கடந்த ஓராண்டாக வெளியில் எங்கும் செல்லவில்லை. வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

பொது நிகழ்ச்சிகளிலும் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடந்த முரசொலி பவளவிழா நிகழ்ச்சியில் கூட கருணாநிதி கலந்து கொள்ளவில்லை.

கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவை தொடர்ந்து முரசொலி பவளவிழாவையும் திமுகவினர் வெகு விமர்சயாக கொண்டாடினர். கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் கண்காட்சி அரங்கம் ஆகஸ்டு 10ம் தேதி தொடங்கி அக்டோபர் 10ம் தேதி நிறைவடைந்தது.

இதில், கண்காட்சி அரங்கினை மாணவர்கள், மாணவிகள், பொதுமக்கள் என 87 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்.

மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் கருணாநிதி விழாவில் கலந்து கொள்ளவில்லை.

இருப்பினும், அவ்வப்போது கருணாநிதியை சில தலைவர்கள் சந்திப்பது மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கையில் அவர் கையெழுத்திட்டது போன்ற புகைப்படங்கள் திமுக சார்பில் வெளியிடப்பட்டன. இதைகண்டு தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

சமீபத்தில் கூட, கருணாநிதி தனது கொள்ளு பேரனுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை திமுகவினர் நெகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர்.

இந்தநிலையில், நேற்று இரவு 7 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி திடீரென்று முரசொலி அலுவலகத்திற்கு வந்தார். அவரை முரசொலி செல்வமும், திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் ஆகிய இருவரும் வரவேற்று அழைத்து சென்றனர்.

பின்னர் அவர், வீல் சேரில் முரசொலி பவள விழா கண்காட்சியை ஒவ்வொரு அரங்காக சென்று பார்வையிட்டார். முரசொலி வளர்ச்சியின் பல்வேறு கட்டங்கள், பழைய கால அச்சு இயந்திரம், சட்டப்பேரவையில் முரசொலி செல்வம் கூண்டில் நிறுத்திய காட்சி ஆகியவற்றை கருணாநிதி உன்னிப்பாக கவனித்தார்.

தொடர்ந்து, கருணாநிதி அமர்ந்திருப்பது போன்ற மெழுகு சிலையை வைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்றார்.

மெழுகு சிலையை கருணாநிதி கவனித்தார். தொடர்ந்து, அவர் 40 நிமிடங்கள் அரங்கை பார்வையிட்டார்.

அரங்கை விட்டு வெளியே வந்து முரசொலி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலி மாறன் சிலையை கருணாநிதி உற்று பார்த்தார். பின்னர், 7. 40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

கருணாநிதியுடன் மு. க. தமிழரசு, செல்வி செல்வம், துரைமுருகன், ஏ. வ. வேலு, பொன்முடி உள்ளிட்டோர் வந்திருந்தனர். திமுக தலைவர் கருணாநிதி முரசொலி அலுவலகம் வந்த தகவல்கள் அறிந்ததும் பத்திரிக்கையாளர்களும், திமுகவினரும், பொதுமக்களும் ஏராளமான அளவில் அப்பகுதியில் திரண்டனர்.

ஓராண்டுக்கு பிறகு கருணாநிதியை நேரில் பார்த்த தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். கடந்தாண்டு முரசொலி மாறன் பிறந்த நாளன்று திமுக தலைவர் கருணாநிதி முரசொலி அலுவலகம் வந்து முரசொலி மாறன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பிறகு, முரசொலி அலுவலகத்திற்கு நேற்று தான் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘விரைவில் மற்றொரு அதிசயம்’

திமுக தலைவர் கருணாநிதியின் மருத்துவர் கோபால் கூறுகையில், ‘‘கருணாநிதியின் உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் மற்றொரு அதிசயத்தையும் காண்பீர்கள்’’ என்றார்.

திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறும்போது, ‘’கருணாநிதியின் உடல்நிலை நன்கு தேறியுள்ளது. அவர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.

விரைவில் பேசுவார்’’ என்றார். கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அவர், நீண்ட நாளுக்கு பிறகு முரசொலி அலுவலகம் சென்ற செய்தி கேட்டதும், திமுக தொண்டர்கள் உற்சாக மிகுதி அடைந்தனர்.

கோபாலபுரம் முன்பு திரண்ட தொண்டர்கள், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

.

மூலக்கதை