தற்கொலை படை தாக்குதல் : ஆப்கன் வீரர்கள் 43 பேர் பலி

தினமலர்  தினமலர்

காபூல்: ஆப்கானிஸ்தானில், ராணுவ முகாம் மீது, தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய, தற்கொலை படை தாக்குதலில், 43 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்; ராணுவ முகாமும் முற்றிலும் தகர்க்கப்பட்டது.
ஆசிய நாடான, ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை ஒழிக்கும் பணியில், அமெரிக்க படையினர் ஈடுபட்டு வந்தனர். தற்போது, அங்கு முகாமிட்டிருந்த பெரும்பாலான அமெரிக்க படையினர், தாயகம் திரும்பி விட்டனர்.
இதையடுத்து, தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம், மீண்டும் தலைதுாக்கியுள்ளது. இந்நிலையில், தெற்கு காந்தகார் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது, நேற்று முன்தினம் இரவு, பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
வெடி குண்டுகள் நிரப்பப்பட்ட இரண்டு கார்களில் வந்த பயங்கரவாதிகள், அவற்றை, ராணுவ முகாம் மீது, மோதினர். இதில், ராணுவ முகாம், முற்றிலும் தகர்க்கப்பட்டது. இந்த தாக்குதலில், ஆப்கன் வீரர்கள், 43 பேர் உயிரிழந்தனர்; மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இன்னும் சில வீரர்களை காணவில்லை.
இது தவிர, பால்க் மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஆறு போலீசார் பலியாயினர். கடந்த சில நாட்களில் மட்டும், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு, 73 வீரர்கள் உயிரிழந்ததாக, ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை