மும்பை தாக்குதல் சதிகாரன் சயீத் காவல் நீட்டிப்பு

தினமலர்  தினமலர்

லாகூர்: மும்பை தாக்குதல் சதிகாரன், ஹபீஸ் சயீதின் வீட்டுக்காவல், மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், ௨௦௦௮, நவ., ௨௬ல், பாக்., பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர், இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன், ஜமாத் - உத் - தவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவன், ஹபீஸ் சயீத்.
இவனது தலைக்கு, அமெரிக்கா, ௬௫ லட்ச ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. இந்தியா, அமெரிக்கா உட்பட உலக நாடுகள் கொடுத்த நெருக்கடியால், ஹபீஸ் சயீத் மற்றும் அவனது உதவியாளர்கள் நான்கு பேரை, இந்த ஆண்டு, ஜன., ௩௧ல், வீட்டுக் காவலில், பாக்., அரசு வைத்தது. சயீத் மற்றும் அவனது உதவியாளர்களின் வீட்டுக்காவல், இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இவர்களது வீட்டுக்காவல், அக்., ௨௪ல் முடிகிறது, இதையடுத்து, சயீத் உட்பட ஐந்து பேரது வீட்டுக்காவலை, மேலும், ௯௦ நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி, நீதி மறு ஆய்வு வாரியத்திடம், பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சகம் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த வாரியம், ஹபீஸ் சயீதின் வீட்டுக் காவலை, ஒரு மாதத்துக்கு நீட்டித்து உத்தரவிட்டது. மற்ற நான்கு பேரது காவலை நீட்டிக்க மறுத்துவிட்டது.

மூலக்கதை