அமெரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானார்கள். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் எட்ஜ்வுட் வணிக பூங்கா பகுதியில் நேற்று காலை ஒருவர் சரமாரியாக அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே துப்பாக்கியால் சுட்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். மேலும், டெல்லாவேர் பகுதியில் உள்ள வில்மிங்டன் என்ற இடத்திற்கு சென்ற அவர் அங்கும் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதிலும் ஒருவர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பள்ளிகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டன. தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். வணிக பூங்காவை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக வில்மிங்டன் போலீஸ் தலைவர் ராபர்ட் டிரேசி கூறுகையில், \'துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவரது பெயர் ரடீ லபீப் பிரின்ஸ். வயது 37. இவர் ஏற்கனவே குற்ற பின்னணி கொண்டவர். எட்ஜ்வுட் பகுதியில் உள்ள கிரானைட் நிறுவனத்தில் தான் பிரின்ஸ் பணிபுரிந்து வந்தார். அவர் துப்பாக்கியால் சுட்ட 5 பேரும் அவருடன் பணியாற்றியவர்கள். இரண்டாவது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் காயம் அடைந்தவர் யார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று பதுங்கியிருந்த பிரின்சை பிடித்து தனி இடத்தில் விசாரித்து வருகிறோம்\' என தெரிவித்துள்ளார்.* அமெரிக்காவில் இந்தாண்டில் இதுவரையில் மட்டும் துப்பாக்கிச்சூட்டில் 286 பேர் கொல்லப்பட்டுள்ளனர். * கடந்த 1ம் தேதி லாஸ்வேகாசில் 60 பேரை ஒருவர் சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்தார். இதில், 500 பேர் குண்டு பாய்ந்து காயமடைந்தனர்.

மூலக்கதை