முலாயம் குடும்பத்தை ஒற்றுமைப்படுத்திய தீபாவளி

தினமலர்  தினமலர்
முலாயம் குடும்பத்தை ஒற்றுமைப்படுத்திய தீபாவளி

லக்னோ: கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த, சமாஜ்வாதி நிறுவனர், முலாயம் சிங் யாதவின் குடும்பத்தை, தீபாவளி பண்டிகை ஒருங்கிணைத்துள்ளது.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமாஜ்வாதி கட்சியின் தலைவர், முலாயம் சிங் யாதவ், தன் குடும்பத்துடன், ஆண்டுதோறும், சொந்த ஊரான, எடாவா மாவட்டம், சைபை கிராமத்தில், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

உ.பி., முதல்வராக, முலாயமின் மகன், அகிலேஷ் யாதவ் இருந்த போது, அவருக்கும், முலாயமின் சகோதரர் ஷிவ்பாலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஷிவ்பாலை, முலாயம் ஆதரித்தார். இதனால், தந்தை - மகன் இடையே பிளவு ஏற்பட்டது. இதையடுத்து, 2016ல், தீபாவளி பண்டிகையை, முலாயம் குடும்பத்தினர் ஒன்றாக கொண்டாடவில்லை. இதேபோல், இந்த ஆண்டு, ஹோலி பண்டிகையையும் ஒன்றாக கொண்டாடவில்லை.

இந்நிலையில், வட மாநிலங்களில், தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.முலாயம் சிங், தன் சொந்த கிராமத்தில், தீபாவளியை கொண்டாடினார். இதில், அகிலேஷ், தன் குடும்பத்துடன் பங்கேற்றார். முலாயமின் சகோதரர், ஷிவ்பாலும் பங்கேற்றார். தந்தை மற்றும் சித்தப்பாவின் கால்களில் விழுந்து, அகிலேஷ் ஆசி பெற்றார்; அகிலேஷின் மகள் டினாவை, முலாயம் கொஞ்சினார்.

இது பற்றி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், 'முலாயம் குடும்பத்தை, தீபாவளி பண்டிகை ஒருங்கிணைத்துள்ளது; கட்சியில், ஷிவ்பாலுக்கு மீண்டும் ஒரு கவுரவமான பதவி வழங்க, வாய்ப்பு உள்ளது' என்றார்.

மூலக்கதை