அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பேச்சு இந்திய நட்பை பலப்படுத்த 100 ஆண்டுகளுக்கு திட்டம்

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: இந்தியா உடனான நட்பை பலப்படுத்த, அடுத்த நூறு ஆண்டுகளுக்கான திட்டத்தை அமெரிக்கா வகுத்துள்ளது.  அமெரிக்காஅதிபர் டிரம்ப், இந்தியாவின் நட்பை பலப்படுத்த அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இவர் சமீபத்தில் தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்க கொள்கையை வெளியிட்டார். அதில், இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உறவை பலப்படுத்தும் வகையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் அடுத்த வாரம் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வருகிறார். இதன் முதல் கட்டமாக, ‘திட்டமிடல் மற்றும் சர்வதேச ஆய்வு மையம்’ சார்பில் வாஷிங்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற சிந்தனையாளர்கள் கூட்டத்தில் பேசிய ரெக்ஸ், அடுத்த நூறு ஆண்டுகளுக்கான இந்திய கொள்கையை வெளியிட்டார்.   இது பற்றி அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:  இந்தோ- பசிபிக் பகுதி இந்தோ - பசிபிக் நாடுகளுக்கான அமெரிக்க கொள்கையை வகுப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது. இந்த நாட்டுடன் உறவை பலப்படுத்த அதிக நேரம் ஒதுக்க டிரம்ப் நிர்வாகம் விரும்புகிறது. பொருளாதாரம், கலாசாரம், தூதரக உறவு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவுடன் நட்பு பலப்படுத்தப்படும். இதனால், இருநாடுகளும் பயன்பெறும். இதன் மூலம், ஒட்டுமொத்த இந்தோ - பசிபிக் பகுதிக்கு நன்மை ஏற்படும்.இந்தியாவை விட சீனா வளர்ந்துள்ளது. ஆனால், சர்வதேச விதிமுறைகளை அது புறம் தள்ளிவிட்டு சிறிதும் பொறுப்பற்ற வகையில் செயல்படுகிறது. ஆனால், இந்தியா போன்ற நாடுகள் இந்த விதிமுறைகளை எல்லாம் கடைபிடித்து வருகின்றன. சீனாவுடன் அமெரிக்கா உறுதியான, பயனுள்ள உறவை வளர்த்துக் கொள்ள விரும்புகிறது. அதே நேரம், சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும் நாடுகளுக்கு சீனாவால் ஏற்படும் சவால்களையோ அல்லது அதன் அண்டை நாடுகளின் இறையாண்மையை அடக்க முயற்சிப்பதையும் அமெரிக்காவால் அலட்சியப்படுத்த முடியாது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர். ‘ஆப்கன் பிரச்னை தீர்ந்தால் இந்திய -பாக் உறவு சீராகும்’வாஷிங்டனில் நடந்த சிந்தனையாளர்கள் கூட்டத்தில் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், ‘‘ஆப்கனிஸ்தானில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு, ஸ்திரமான மற்றும் அமைதியான நாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. இதை சாதிக்க வேண்டும் என்றால், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ஒத்துழைப்பு கட்டாயம் தேவை. ஆப்கனிஸ்தானில் இதை சாதித்து விட்டால், பாகிஸ்தானின் எதிர்காலம் மீதான அச்சுறுத்தல் விலகி விடும். அப்படி நடந்தால், இந்தியா - பாகிஸ்தான் உறவு சீராகும். பாகிஸ்தான் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்கா உதவும்’’ என்றார்.

மூலக்கதை