விலை உயர்வால் மதுப்பிரியர்கள் கடும் அதிருப்தி : தீபாவளிக்கு ஒரே நாளில் ரூ.160 கோடி மது விற்பனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
விலை உயர்வால் மதுப்பிரியர்கள் கடும் அதிருப்தி : தீபாவளிக்கு ஒரே நாளில் ரூ.160 கோடி மது விற்பனை

சென்னை : தீபாவளி நாளில் மட்டும் மது விற்பனை ரூ. 160 கோடியைத் தாண்டியுள்ளது. தீபாவளி விடுமுறை முடிவதற்குள் இது ரூ. 500 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூலம், சாதாரண நாட்களில் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ. 65 முதல் ரூ. 70 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும்.

வார விடுமுறை நாட்களில் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ. 80 முதல் ரூ. 90 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும். கடந்த 2016ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு பிறகு மறைந்த முதல்வர் ஜெயலலிதா 500 மதுபான கடைகளை மூடினார்.   அதன் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி 500 கடைகளை மூடினார்.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள மதுபான கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, கடந்த மார்ச் மாதம் 31ம் தேதியுடன் 3,321 மதுபான கடைகள் மூடப்பட்டன. இதனால், மதுபான விற்பனை பெருமளவில் பாதிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.



ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டுமே விற்பனை பாதித்தது. கடைகள் குறைக்கப்பட்டாலும் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

எவ்வளவு தூரமானாலும் சென்று மது வாங்கும் நிலையில் அவர்கள் இருப்பதால் மது விற்பனை மீண்டும் பழைய நிலைக்கே வந்தது. இதனால் கடந்த  ஜூலை மாதம் முதல், மாதம் ஒன்றுக்கு வழக்கம் போல் 47 லட்சம் மதுபான பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

மூடப்பட்ட 4,321 கடைகளுக்கு பதில் புதிதாக ஆயிரத்துக்கும் அதிகமான மதுபான கடைகள் திறக்கப்பட்டது. கடைகள் பாதியாக குறைக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே இருந்த விற்பனை மீண்டும் வருமா என்ற குழப்பம் டாஸ்மாக் அதிகாரிகள் மத்தியில் நிலவி வந்தது.



இந்நிலையில், மது விற்பனையை தமிழக அரசு திடீரென உயர்த்திவிட்டது. குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.

10லிருந்து ரூ. 30வரை தரத்திற்கு ஏற்பவும், பீர் ரகங்களுக்கு ரூ. 10ம் அதிகரிக்கப்பட்டது. தீபாவளியைக் குறிவைத்தே இந்த விலை ஏற்றம் என்று பேசப்பட்டாலும் மதுப் பிரியர்களுக்கு இது ஒரு பிரச்னையாகவே தெரியவில்லை.

அதனால், தீபாவளி விடுமுறையில் ரூ. 500 கோடி வரை விற்பனையை நடத்தி விட வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டது. இதை நிரூபிக்கும் வகையில் தீபாவளி நாளில் மட்டும் ரூ. 160 கோடி மது விற்பனை நடந்துள்ளது.

விடுமுறை முடிய இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் டாஸ்மாக் நிர்வாகத்தின் இலக்கு எளிதாக எட்டிவிடும் என்று டாஸ்மாக் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

.

மூலக்கதை