வரலாறு காணாத தீபாவளி பட்டாசு புகை சென்னை திணறியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
வரலாறு காணாத தீபாவளி பட்டாசு புகை சென்னை திணறியது

சென்னை : பட்டாசு புகையால் சென்னை மாநகர் முழுவதும் நேற்று புகை மண்டலமாக மாறிப் போனது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவாசிக்க முடியாமல் திணறினர்.

புகை மூட்டத்தால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். ரயில்களும் வேகம் குறைவாக இயக்கப்பட்டது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று  கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் காலையிலே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து,  கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பொதுமக்கள்  தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று இனிப்புகளை பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்து  கொண்டனர். வீடுகளில் இருந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை  வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சென்னையில் ஏராளமானோர் நேற்று காலை முதல் பட்டாசுகளை வெடித்தனர். குறிப்பாக சிறுவர்கள் அதிக அளவில் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கினர்.

இதனால், சென்னை மாநகரில் திரும்பிய பக்கம் எல்லாம் பட்டாசு சத்தம் காதை பிளந்தது.

மாலையில் பல்வேறு வண்ணக் கலவைகள் கொண்ட பட்டாசுகளை வெடித்தனர். அதேநேரத்தில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளையும் அதிகமாக வெடித்தனர்.

ராக்கெட் போன்ற வெடிகளை வெடித்ததால் இரவில் வானில் வண்ணமயமாகவே காட்சியளித்தது. தொடர்ந்து இரவு 10 மணி வரை பட்டாசுகள் வெடித்ததால் சென்னை மாநகரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

குறிப்பாக, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, கே. கே. நகர், அண்ணா நகர், திருவான்மியூர், தேனாம்பேட்ைட, கிண்டி உட்பட பல்வேறு பகுதிகள் புகைமண்டலமாக இருந்தது. இந்த புகை மூட்டத்தால் சாலைகளில் சென்ற வாகனங்கள் முன்புறம் செல்லும் வாகனம் கூட தெரியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

ஒரு சில இடங்களில் முன்னால் வந்த வாகனம் தெரியாமல் மோதிய சம்பவமும் நிகழ்ந்தது.
நகர் பகுதி முழுவதும் புகை மண்டலமாக இருந்ததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூச்சு விட முடியாமல் தவித்தனர்.

குறிப்பதாக ஆஸ்துமா நோய் இருப்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அவர்கள் சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டது.



மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் புகை மூட்டம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீடுகளில் பல இடங்களில் சுவர்கள் கருப்பு நிறமாக மாறியது. மேலும், புகைமூட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள புகைமூட்டத்தால் சென்னை பறக்கும் மின்சார ரயில், புறநகர் மின்சார ரயில்கள் மிகவும் குறைந்த வேகத்தில் இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுது.

அதன்படி நேற்றிரவு குறைந்த வேகத்தில் மின்சார ரயில்கள் அனைத்தும் இயக்கப்பட்டன. பட்டாசு புகையால் சென்னையில் நேற்று காற்று மாசு பெருமளவு அதிகரித்துள்ளது.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சென்னையில் மூன்று இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. காற்று மாசுபாடு அனுமதிக்கப்பட அளவை விட ஒன்றரை மடங்கு அதிகரித்து–்ளளது.

ஒரு கனமீட்டருக்கு 100 மைக்ரான் என்பதே அனுமதிக்கப்பட்ட காற்று மாசுபாட்டின்  அளவாகும். ஆனால், நேற்று இது 300 மைக்ரான் என்ற அளவில் இருந்ததாக கூறப்படுகிறது.   காற்றில் நுண்துகள் கலப்பதால் சுவாசக் கோளாறுகள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது என மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

எனவே, இனி வரும் காலங்களில் குறைந்தளவில் மாசுவை ஏற்படுத்தும் பட்டாசுகளை மட்டுமே சென்னை மாநகரில் ெவடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


.

மூலக்கதை