நிலவேம்பு பற்றி சர்ச்சை கருத்து கமலுக்கு அமைச்சர் எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
நிலவேம்பு பற்றி சர்ச்சை கருத்து கமலுக்கு அமைச்சர் எச்சரிக்கை

சென்னை : ஆராய்ச்சி முடிவு வரும் வரை நிலவேம்பு யாருக்கும் தரவேண்டாம் என்று ரசிகர்களை கேட்டுக்கொண்டிருக்கிறார் கமல். அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர், நிலவேம்புபற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் பரவலாக டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் பலியாகியும் வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலை கட்டுப் படுத்த நிலவேம்பு கசாயத்தை அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு அரசியல் அமைப்புகள் சார்பில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் நிலவேம்பு பற்றி கருத்து வெளியிட்டிருந்தார்.

அது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் 2 கருத்துகள் வெளியிட்டுள்ளார் கமல்.

சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும் என்று ஒரு பதிவிலும், ஆராய்ச்சி அலோபதியார்தான் செய்ய வேண்டுமென்றில்லை.

பாரம்பரிய காவலர்களே செய்திருக்க வேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான் என மற்றொரு பதிவிலும் குறிப்பிட்டிருந்தார்.

கமலின் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக நேற்று பதில் அளித்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘நிலவேம்பு ஏற்கனவே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

அதை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. ரத்த அணுக்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

இதனால் எந்தவித பக்கவிளைவும் இல்லை. வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

அமைச்சரின் எச்சரிக்கையில் கமல் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. கமலுக்கு பதில் அளித்து பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறும்ேபாது,’ஒரு டாக்டர் என்ற முறையில் நிலவேம்பு பற்றி முற்றிலுமாக படித்தறிந்த பிறகுதான் அதை நான் ஒப்புக் கொண்டேன்.

இதுபற்றி ஆராய்ச்சியும் செய்து சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. கமல்ஹாசன் எல்லாவற்றையும் சினிமாவாக பார்க்கிறார்.

அவர் சொல்வதை சீரியஸாக நாங்கள் எடுத்துக் கொள்வதில்லை.

யாரோ எழுதி தரும் வசனத்தை அவர் பேசுகிறார்’ என தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை