சில சினிமா பிரபலங்கள் வதந்தி பரப்புகின்றனர்: – தமிழிசை செளந்தரராஜன்

என் தமிழ்  என் தமிழ்
சில சினிமா பிரபலங்கள் வதந்தி பரப்புகின்றனர்: – தமிழிசை செளந்தரராஜன்

அரசின் முயற்சிகளுக்கு ஊறுசெய்யும் வகையில், சில சினிமா பிரபலங்கள் வதந்தி பரப்புகின்றனர்’ எனத் தமிழிசை செளந்தரராஜன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்துவரும் நிலையில், அரசு சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அதன் ஒருபகுதியாக, நிலவேம்புக் குடிநீரும் அரசு சார்பில் வழங்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், நிலவேம்புக் குடிநீரால் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவியது.

ஆனால், அந்தத் தகவல் வதந்தி என்றும் அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. நிலவேம்புக் குடிநீர்குறித்து வதந்தி பரப்புவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், ‘சரியான ஆராய்ச்சி முடிவு கிடைக்கும்வரை நிலவேம்புக் குடிநீர் விநியோகத்தில் ஈடுபட வேண்டாம்’ என்று ரசிகர்களை கமல் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த சர்ச்சைகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், “மக்கள் டெங்குவால் அவதியுறும் வேளையில், அரசின் முயற்சிக்கு சிலர் வதந்தி பரப்புவது ஏன்? அரசின் முயற்சிகளுக்கு ஊறுசெய்யும் வகையிலேயே சில சினிமா பிரபலங்கள் இந்த வதந்தியைப் பரப்புகின்றனர். நிலவேம்புக் குடிநீர் பற்றி வதந்தி பரப்புவோர்மீது நடவடிக்கை என அமைச்சர் கூறியிருப்பதை வரவேற்கிறேன்’’ எனக் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை