'அமெரிக்காவுக்கு உதவ இந்தியாவால் முடியும்!'

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்: ''பாக்.,கின் மீது ஒரு கண் வைத்திருக்கவும், பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழ்வதற்கு, அந்நாட்டை பொறுப்பேற்க செய்யவும், அமெரிக்காவுக்கு இந்தியா உதவ முடியும்,'' என, ஐ.நா.,வுக்கான அமெரிக்க துாதர், நிக்கி ஹாலே கூறினார்.
வாஷிங்டனில் நேற்று, அமெரிக்க இந்திய நண்பர்கள் கவுன்சில் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில், நிக்கி ஹாலே பேசியதாவது:
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, பாக்., செயல்படுவது தொடர்பாக, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் கடுமையான அணுகுமுறையை கடைபிடித்து வருகிறார்.
அமெரிக்காவின் நட்பு நாடாக, சில சமயங்களில், பாக்., செயல்படுகிறது; அதை, நாங்கள் மதிக்கிறோம். அதேசமயம்,
அமெரிக்காவை குறிவைத்து தாக்க முயற்சிக்கும் பயங்கரவாதிகளுக்கு, பாக்., அரசு புகலிடம் அளிப்பதை, அமெரிக்காவால் ஒருபோதும் ஏற்க முடியாது.
ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதில், அமெரிக்காவுக்கு, இந்தியாவும் துணை நிற்க முடியும். ஆப்கனின் ஸ்திரத்தன்மைக்கு, இந்தியா, ஏற்கனவே உதவி வருகிறது.
அந்த பிராந்தியத்தில், இந்தியாவும், ஆப்கனும், சிறந்த நட்பு நாடுகளாக திகழ்கின்றன.
பாக்.,கின் மீது ஒரு கண் வைத்திருக்கவும், பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழ்வதற்கு, அதனை பொறுப்பேற்கச் செய்யவும், அமெரிக்காவுக்கு இந்தியா உதவ முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை