தீபாவளி பட்டாசு மாசு இந்த ஆண்டு குறையுமா?

தினமலர்  தினமலர்
தீபாவளி பட்டாசு மாசு இந்த ஆண்டு குறையுமா?

தீபாவளி பண்டிகை தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், மாசுபடுத்தும் பட்டாசு வெடிப்பது குறைந்து உள்ளது. அதனால், வழக்கத்தை விட இந்த ஆண்டு மாசு அளவு குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வழக்கம்போல், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து கூறி கொண்டாடினர். அதேபோல், தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக, அனைத்து ஊர்களிலும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். ஆனால், முந்தைய ஆண்டுகளை போல், அதிக ஒலி எழுப்பும் வகை பட்டாசுகளை வெடிப்பது குறைந்தது; வானில் வர்ணஜாலம் காட்டும், வண்ண, பேன்சி ரக பட்டாசுகள் அதிக அளவில் வெடிக்கப்பட்டன.

ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி நாளில் மற்ற நாட்களை விட, 50 சதவீதம் அதிகமாக, காற்றில் மாசு கலக்கும். எனவே, மாசைக் கட்டுப்படுத்த பட்டாசு வெடிப்பதில் பல்வேறு வழிகாட்டல்களை, சுப்ரீம் கோர்ட் வழங்கியது. இந்த வழிகாட்டல்கள், பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டன. இதையொட்டி, இந்த ஆண்டு, அதிக விழிப்புணர்வு காரணமாக, பட்டாசு வெடிப்பது குறைந்து உள்ளது. மேலும், அதிக ஒலி மற்றும் மாசு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளும், உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான தீபாவளி நாள் மாசு அளவின் விபரம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால், இன்று வெளியிடப்படும். இதில், முந்தைய ஆண்டுகளை விட, தீபாவளி நாள் மாசு அளவு குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

-நமது நிருபர்-

மூலக்கதை