வெள்ளை மாளிகையில் முதன்முதலாக தீபாவளி கொண்டாடிய டிரம்ப்

என் தமிழ்  என் தமிழ்
வெள்ளை மாளிகையில் முதன்முதலாக தீபாவளி கொண்டாடிய டிரம்ப்

அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றபின் முதன்முறையாக வெள்ளை மாளிகையில் இந்தியர்களுடன் டொனால்ட் டிரம்ப் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

இந்தியர்கள் பெரும்பான்மையாக வாழும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தை முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து அமெரிக்காவின் அதிபராக கடந்த 2008-ம் ஆண்டு பதவியேற்ற பராக் ஒபாமா, கடந்த 2009-ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் முதன்முதலாக தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

அதன்பின்னர், ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சேல் தலைமையில் அந்நாட்டின் எம்.பி.க்கள், ஒபாமாவின் நிர்வாகத்தின்கீழ் பணியாற்றும் அரசு உயரதிகாரிகள், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பிரமுகர்கள் ஆகியோர் பங்கேற்கும் தீபாவளி விழா அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வந்தது.

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வரலாற்றில் முதன்முறையாக அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமா தனது அலுவலகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு குத்துவிளக்கேற்றி தீபாவாளி கொண்டாடினார். வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒபாமா குத்துவிளக்கு ஏற்றும் புகைப்படத்துடன் அவரது தீபாவளி வாழ்த்து செய்தியும் வெளியானது.

இந்நிலையில், அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அந்நாட்டின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றார். அந்நாட்டின் அதிபர் என்ற முறையில் முதன்முறையாக வெள்ளை மாளிகையில் இந்தியர்களுடன் டொனால்ட் டிரம்ப் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

டிரம்ப்பின் மகள் இவான்க்காவும் பங்கேற்ற இந்த விழாவில் அவரது நிர்வாகத்தில் தலைமை பொறுப்புகளை வகித்துவரும் இந்திய அமெரிக்க அதிகாரிகளான நிக்கி ஹாலே, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த இந்திய பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

அவர்களிடையே பேசிய டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா மற்றும் உலகிற்கு இந்திய அமெரிக்கர்கள் அளப்பரிய பங்களிப்பை ஆற்றிள்ளதாக குறிப்பிட்டார்.

கலை, அறிவியல், மருத்துவம், கல்வி ஆகிய துறைகளில் உங்களது அர்ப்பணிப்பு அபாரமானது. அமெரிக்க ராணுவத்தில் இணைந்து தாய்மண்ணை பாதுக்காக்கும் கடமையில் வீரத்துடன் ஈடுபட்டிருக்கும் இந்திய அமெரிக்கர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

அமைதி மற்றும் வளமையுடன் புதிய ஆண்டை வரவேற்கும் இந்த தீபாவளி திருநாளை உலகம் முழுவதும் சுமார் 100 கோடி இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். அமெரிக்காவில் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொண்டாடுகின்றனர்.

மக்களின் வீடான இந்த வெள்ளை மாளிகையில் இன்று இந்த நன்நாளை நாம் பெருமையுடன் கொண்டாடுகிறோம். தீபங்களின் விழாவான இந்த தீபாவளியை நானும் இணைந்து கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கிறேன். இதன்மூலம் இங்குள்ள இந்திய அமெரிக்கர்களும், இந்து மதத்தை சேர்ந்த அமெரிக்கர்களும், நமது உயர்வான அமெரிக்க குடும்பத்தின் மகிழ்ச்சிக்குரிய, மதிப்பிற்குரிய, நம்பிக்கைக்குரிய அங்கத்தினர்கள் என்பதை நாம் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம் என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை