நேபாளத்தில் கோவிலை சீரமைக்க அமெரிக்கா ரூ.65 லட்சம் நிதியுதவி

தினமலர்  தினமலர்

காத்மாண்டு; நேபாளத்தில், நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட, ஹிந்து கோவிலை சீரமைக்க, அமெரிக்கா, 65லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளது.
அண்டை நாடான நேபாளத்தில், 2015ல், பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இதில், 9,000க்கும் அதிகமானோர் இறந்தனர், 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர், படுகாயம் அடைந்தனர். மூன்று லட்சத்துக்கும் அதிகமான வீடுகள், கட்டடங்கள் தரைமட்டமாயின. காத்மாண்டுவில், ௧௬ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட, மஹா விஷ்ணு கோவிலும் சேதமடைந்தது.
இந்நிலையில், இந்த கோவிலை சீரமைக்க, அமெரிக்கா, ௬௫ லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. நேபாளத்தில் உள்ள அமெரிக்க துாதரகம், கலாசார பாதுகாப்புக்கான நிதியிலிருந்து, இந்த உதவியை செய்துள்ளது.
இது பற்றி, நேபாளத்தில் உள்ள அமெரிக்க துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காத்மாண்டுவில், வரலாற்று சிறப்பு மிக்க, 'நாராயண்' கோவிலை சீரமைக்க, அமெரிக்க துாதரகம், ௬௫ லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது.
இது, நேபாளத்தின், வலிமையான கலாசாரத்தின் மீது, அமெரிக்கா வைத்துள்ள மதிப்பை காட்டுகிறது' என, கூறப்பட்டுள்ளது.
நேபாள நாட்டின் தொல்பொருள் ஆய்வுத்துறை தலைமை இயக்குனர், தெப்லிட்ஸ் கூறுகையில், ''அமெரிக்காவுடனான உறவின், ௭௦வது ஆண்டை, நாங்கள் கொண்டாடி வருகிறோம். அமெரிக்க நிதியுதவி மற்றும் பலர் செய்துள்ள நிதியுதவி மூலம், இரண்டு ஆண்டுகளில், கோவில் சீரமைக்கப்படும்,'' என்றார்.

மூலக்கதை