வீணாகும் உணவை ஏழைகளுக்கு வினியோகிக்கும் திட்டம்... துவக்கம்!

தினமலர்  தினமலர்
வீணாகும் உணவை ஏழைகளுக்கு வினியோகிக்கும் திட்டம்... துவக்கம்!

புதுடில்லி:உணவு பொருட்கள் வீணாவதை தடுக்கவும், அந்த உணவை சேகரித்து, ஏழைகளுக்கு வினியோகிக்கவும், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம், 'இந்திய உணவு மீட்பு அணி' என்ற பெயரில், புதிய அமைப்பை உருவாக்கி உள்ளது.

நாடு முழுவதும், ஏராளமான ஏழைகள், போதிய உணவின்றி திண்டாடும் நிலை உள்ளது. அதேசமயம், பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் உணவுப் பொருட்கள் வீணாகி, குப்பையில் வீசப்படுகின்றன. அளவுக்கு அதிகமாக தயாரிக்கப்பட்டு, வீணாகும் இத்தகைய உணவுப் பொருட்களை சேகரித்து, தேவைப்படும் ஏழைகளுக்கு வினியோகிக்கலாம் என்ற கருத்தை, பல தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்:

பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளில் தயாரிக்கப்பட்டு வீணாகும் உணவுப் பொருட்களை சேகரித்து, ஏழைகளுக்கு வினியோகிக்கும் பணிகளில், பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அத்தகைய அமைப்புகளை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய குழுக்களை இணைத்து, ஐ.எப்.ஆர்.ஏ., எனப்படும், இந்திய உணவு மீட்பு அணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் சேகரிக்கும் உணவு பற்றிய தகவல்கள் பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றப்படும்.

இந்த இணையதளத்தில், வீணாகும் உணவு குறித்த தகவல்களை, தனி நபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அல்லது ஆர்வலர்கள் தெரிவிக்கலாம்.இது குறித்த ஆரம்ப கட்ட ஆய்வுக்கு பின், பிரதான இணையதளமும், மொபைல், 'ஆப்'களும், உணவு நன்கொடை அளிக்க விரும்புவோருக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். உணவு மீட்பு ஏஜன்சிகள், சேகரிக்கப்படும் உணவை, சீராக வினியோகிக்கும் பணிகளை மேற்கொள்ளும்.

நன்கொடையாளர்கள், தாங்கள் அளித்த உணவுப் பொருட்கள், எங்கு, யாருக்கு அளிக்கப்படுகின்றன என்பதை, மொபைல் ஆப் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்படும் இணைய தளமும், மொபைல் ஆப்களும், உணவு வீணாவதை தடுப்பதற்கான ஆலோசனைகளையும், கூடுதல் உணவை, தேவைப்படும் ஏழைகளுக்கு எடுத்துச் சேர்ப்பதற்கான வழிமுறைகளையும் வழங்கும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உறுதிமொழி ஏற்கும் திட்டம்


'என் தட்டில் உணவை வீணாக்க மாட்டேன்' என்ற உறுதிமொழியை, நாடு முழுவதும் மக்கள் ஏற்க வேண்டுமென, மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரும், அகாலி தளம் கட்சியை சேர்ந்தவருமான, ஹர்சிம்ரத் கவுர் பாதல் நேற்று, வலியுறுத்தினார்.

நாடு முழுவதும், ஆயிரக்கணக்கான ஏழைகள், உணவின்றி தவித்து வரும் நிலையில், லட்சக்கணக்கான டன் உணவுப் பொருட்கள் வீணாகும் அவல நிலை தற்போது உள்ளது. இந்நிலையில், 'என் தட்டில் உணவை வீணாக்க மாட்டேன்' என்ற உறுதிமொழியை ஏற்கும்படி, மக்களை அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து, ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறுகையில், ''பல நாடுகள், உணவு வீணாவதை தடுக்க சட்டம் இயற்றி உள்ளன. இந்தியாவில், உணவு வீணாவதை தடுக்கும் இயக்கமாக, 'என் தட்டில் உணவை வீணாக்க மாட்டேன்' என்ற உறுதிமொழியை ஏற்கும் திட்டத்தை துவக்கி உள்ளோம்; இது, பெரியளவில் வெற்றி பெறும்,'' என்றார்.

தன்னார்வ அமைப்புகளின் பங்கு


வீணாகும் உணவுப் பொருட்களை சேகரித்து, ஏழைகளுக்கு வினியோகித்து வரும் பணிகளில், ஏற்கனவே, பல தன்னார்வ அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. 'நோ புட் வேஸ்ட், பீடிங் இந்தியா, இந்தியன் புட் பேங்கிங் நெட்வொர்க்கிங், ரோட்டி பாங்க், அன்ன ஷேத்ரா, கிவ்அவே இந்தியா, ராபின் ஹுட் ஆர்மி உள்ளிட்ட பல தன்னார்வ அமைப்புகள், இந்த பணியை செய்து வருகின்றன. நாடு முழுவதும், 70 நகரங்களில், தினசரி, ஒரு லட்சம் பேருக்கு, வீணாகும் உணவுப் பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

ஒருங்கிணைந்த அணுகுமுறை

வீணாகும் உணவுப் பொருட்களை மீட்க வேண்டிய அவசியம் குறித்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தலைமை நிர்வாகி, பவன் அகர்வால் கூறியதாவது:உணவு வீணாவதால் எழும் பிரச்னைகளுக்கு தீர்வாக, நாடு முழுவதும், உணவு மீட்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு, ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம். இந்திய உணவு மீட்பு அணி திட்டம், வீணாகும் கூடுதல் உணவுப் பொருட்களை மீட்க உதவும்.

இதன் மூலம், உணவு மீட்பு அணிகள், வீணாகும் உணவை சேகரிக்கும் பணியில், ஒரே மாதிரியான அணுகுமுறையை மேற்கொள்ள முடியும். இதனால், பசிக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.இவ்வாறு பவன் அகர்வால் கூறினார்.

மூலக்கதை