சூடானில் உள்ள இந்திய அமைதிப்படை வீரர்கள் 50 பேருக்கு ஐ.நா விருது

தினகரன்  தினகரன்

ஐக்கிய நாடுகள்: தெற்கு சூடானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள, இந்திய அமைதி படை வீரர்கள் 50 பேருக்கு, ஐக்கிய நாடுகள் சபை விருது வழங்கி கவுரவித்துள்ளது. தெற்கு சூடானில் உள்நாட்டு போர் நடந்து வருகின்றது. மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இந்திய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் சிறப்பாக பணியாற்றிய  இந்திய அமைதி படை வீரர்கள் 50 பேருக்கு ஐநா விருது வழங்கியுள்ளது. இந்த விருதை, யுஎன்எம்ஐஎஸ்எஸ் படையின் கமாண்டர் ஜெனரல் பிராங்முஷ்யோ காமன்சி வழங்கினார். இவர்கள் அப்பகுதியில் உள்ள 2500 பேருக்கு பாதுகாப்பு வழங்கி வந்துள்ளனர். இது தொடர்பாக கமாண்டர் காமன்சி கூறுகையில், “ ஜோங்லெய் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இந்திய வீரர்களின் வீரம் மற்றும் அர்ப்பணிப்புடனான பணி ஆகியவற்றுக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். ஜோங்லே அரசும் இந்திய அமைதிப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தி கவுரவித்துள்ளது. ஜோங்லே பொறுப்பு கவர்னர் அகாட் அலியர் கூறுகையில், “ ஜோங்லெய் பகுதி மக்களின் பாதுகாப்பில் இந்திய அமைதிப்படை வீரர்களின் பங்கு முக்கியமானது. பாதுகாப்பு பணியை கடந்து மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் உள்ளூர் விவசாயிகளின் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளையும் அவர் மேற்கொண்டு வருகின்றனர்” என்றார். தெற்கு சூடானுக்கான இந்திய தூதர் குமார் மேனனும் இந்திய அமைதிப்படை வீரர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

மூலக்கதை