சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் சிக்கன் மூலம் புதிய ஆபத்து: இ.கோலி பாக்டீரியா காரணமா?

தினகரன்  தினகரன்

கலிபோர்னியா: சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் கோழி இறைச்சி யில் இருக்கும் ஈ.கோலி பாக்டீரியா, மனிதர்களின் சிறுநீர் பாதையில் நோய் ஏற்பட காரணமாக இருக்கலாம் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிறுநீர் பாதை தொற்றுக்கு ஆளாகிறார்கள். இதற்கு உணவு பழக்கம் உட்பட பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம் என ஏற்கனவே பல ஆராய்ச்சி தகவல்கள் கூறியுள்ளன. சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படுபவர்களின் சிறுநீரை சோதித்து பார்த்ததில், 80 சதவீதம் பேருக்கு எஸ்செரிசியா கோலி(இ.கோலி) பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இது எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இந்த இ.கோலி பாக்டீரியாவில் பல வகை உள்ளன. சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் இறைச்சிகள் இதற்கு காரணமா என்ற ஆராய்ச்சி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. கலிபோர்னியா பகுதிகளில் சூப்பர் மார்க்கெட்களில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் இறைச்சிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. வான்கோழி, கோழி,் மாடு, பன்றி ஆகியவற்றின் இறைச்சி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வான்கோழி இறைச்சிகளை ஆய்வு செய்ததில், 73 சதவீதம் இறைச்சிகளில் இ-கோலி பாக்டீரியா பாதிப்பு இருந்தது. சிக்கன் பிரெஸ்ட் மாதிரிகளை ஆய்வு செய்தபோது 43 சதவீத இறைச்சிகளில் இ-கோலி பாக்டீரியா இருந்தது, மாட்டிறைச்சியில் 18 சதவீமும், பன்றிக் கறியில் 15 சதவீதமும் இ-கோலி பாக்டீரியா பாதிப்பு இருந்தது. மொத்தத்தில் நான்கில் ஒரு பங்கு இறைச்சியில் இ-கோலி பாக்டீரியா பாதிப்பு இருந்தது. இ-கோலி பாக்டீரியாவில் பல வகைகள் உள்ளன. ஆனால் சிறுநீர் பாதை தொற்றுக்கு ஆளானவர்களின் சிறுநீரில் இருந்த இ-கோலி பாக்டீரியாவும், சூப்பர் மார்க்கெட் இறைச்சிகளில் இருந்த இ-கோலி பாக்டீரியாவும் ஒரே வகை என்பது டிஎன்ஏ ஆய்வில் உறுதியானது. அதனால் சிறுநீர் பாதை தொற்றுக்கு காரணமான இ-கோலி பாக்டீரியா, சூப்பர் மார்க்கெட் இறைச்சிகளில் இருந்து பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. பச்சை மாமிசத்தை சரியான முறையில் பராமரிக்காதது, முறையாக சமைக்காதது போன்றவற்றால் இந்த இ-கோலி பாக்டீரியா மனிதனின் பெருங்குடலுக்குள் சென்று பாதுகாப்பாக உயிர் வாழ்கிறது. இந்த இ-கோலி பாக்டீரியா மலம் மூலமாக வெளியேறும்போது, மனிதர்களின் சிறுநீர் பாதையிலும் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சிறுநீர் பாதை தொற்றுக்கு உள்ளானவர்களிடம் என்ன உணவு சாப்பிட்டீர்கள் என்ற விஷயத்தை ஆராய்ச்சியாளர்கள் கேட்கவில்லை. அதனால் சிறுநீர் பாதை தொற்றுக்கு, சூப்பர் மார்க்கெட் கோழி இறைச்சி வகைகள்தான் காரணம் என்பதை 100 சதவீதம் உறுதிபடுத்த முடியவில்லை. இந்த ஆராய்ச்சி கட்டுரை கலிபோர்னியா மாநிலத்தின் சான் டியாகோவில் சமீபத்தில் நடந்த ‘ஐடீ வீக் 2017’ என்ற தொற்றுநோய் பாதிப்பு கருத்தரங்கில் வெளியிடப்பட்டது.

மூலக்கதை