2 ஆவது போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி!

PARIS TAMIL  PARIS TAMIL
2 ஆவது போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி!

இலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் 32 ஓட்டங்களால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலைபெற்றுள்ளது.
 
இறுதிவரை இலங்கை அணியின் வெற்றிக்காக போராடி ஆட்டமிழப்பின்றி 112 ஓட்டங்களைக் குவித்த அணித் தலைவர் உபுல் தரங்கவின் முயற்சியும் இறுதியில் வீணானது.
 
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்றுவருகின்றது.
 
இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 83 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரில் 1-0 என முன்னிலைபெற்றிருந்தது.
 
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது போட்டி நேற்று டுபாயில் இடம்பெற்றது. 
 
இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
 
அதன்படி தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 219 ஓட்டங்களைப்பெற்று 9 விக்கெட்டுகளை இழந்தது.
 
துடுப்பாட்டத்தில் சிறப்பாக துடுப்படுத்தாடிய பாபர் அசாம் இப் போட்டியிலும் சதமடித்தார். அவர் 133 பந்துகளில் 101 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
 
இப் போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் மிகவும் நேர்த்தியாக பந்துகளை வீசினர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக கமகே 4 விக்கெட்டுகளையும் பெரேரா 2 விக்கெட்டுளையும் வீழ்த்தினர்.
 
இந்நிலையில் 220 ஓட்டங்களை பெற்றால் போட்டியில் வெற்றிபெறலாம் என்ற எண்ணத்துடன் இறங்கிய இலங்கை அணியின் எண்ணங்கள் தவிடுபொடியாகின.
 
பாகிஸ்தான் வீரர்கள் அபாரமாக பந்துவீச, இலங்கை அணியின் விக்கெட்டுகள் ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிக்கப்பட்டன.
 
இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க மாத்திரம் நிதானமாக துடுப்பெடுத்தாடி இறுதிவரை ஆட்டமிழக்காது 112 ஓட்டங்களைப்பெற்றுக் கொடுத்தார்.
 
ஏனைய வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில் இலங்கை அணி இறுதியில் 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்று 32 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
 
32 ஓட்டங்களால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
 
இரு அணிகளுக்குமிடையிலான முக்கியமானதும் 3 ஆவதுமான போட்டி எதிர்வரும் 18 ஆம் திகதி டுபாயில் இடம்பெறவுள்ளது.

மூலக்கதை