உணவு பொருட்கள் விலை குறைவு : பணவீக்கம் சரிந்தது

தினமலர்  தினமலர்
உணவு பொருட்கள் விலை குறைவு : பணவீக்கம் சரிந்தது

புதுடில்லி, : செப்டம்பரில், காய்கறிகள் உள்ளிட்ட, உணவுப் பொருட்கள் விலை குறைந்ததால், மொத்த விலை பணவீக்கம் சரிவடைந்து உள்ளது.இது குறித்து, மத்தியவர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:மொத்த விற்பனை விலை அடிப்படையிலான பணவீக்கம், செப்டம்பரில், 2.6 சதவீதமாக சரிவடைந்து உள்ளது; இது, ஆகஸ்டில், முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத வகையில், 3.24 சதவீதமாக உயர்ந்து இருந்தது. அதே சமயம், 2016 செப்டம்பரில், மொத்த விலை பணவீக்கம், 1.36 சதவீதமாக இருந்தது.செப்டம்பரில், உணவுப் பொருட்கள் பணவீக்கம், 2.04 சதவீதமாக குறைந்துள்ளது; இது, ஆகஸ்டில், 5.75 சதவீதமாக இருந்தது. இதே காலத்தில், காய்கறிகள் பணவீக்கம், 44.91லிருந்து, 15.48 சதவீதமாக சரிவடைந்து உள்ளது.உணவுப் பொருட்கள் பணவீக்கம் குறைந்துள்ள போதிலும், வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததை அடுத்து, அதன் பணவீக்கம், 79.78 சதவீதமாக அதிகரித்துள்ளது. அது போல, முட்டை, மாமிசம், மீன் ஆகியவற்றின் பணவீக்கம், 5.47 சதவீதமாக உயர்ந்துள்ளது. தயாரிப்பு பொருட்கள் பணவீக்கம், செப்டம்பரில், 2.72 சதவீதமாக உயர்ந்துள்ளது; இது, ஆகஸ்டில், 2.45 சதவீதமாக இருந்தது.இதே காலத்தில், எரிபொருள் மற்றும் மின்சார பணவீக்கம், 9.99லிருந்து, 9.01 சதவீதமாக குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், பெட்ரோல், டீசல் விலை, தொடர்ந்து இரு மாதங்களாக உயர்ந்தது. இதனால், மதிப்பீட்டு மாதத்தில்,எரிபொருள் பணவீக்கம் அதிகரித்துள்ளது.உள்நாட்டில், மின் உற்பத்தி குறைந்ததால், மின்சார பணவீக்கம் உயர்ந்துள்ளது. பருப்பு வகைகள் விலை தொடர்ந்து குறைந்து வந்ததால், அவற்றுக்கான பணவீக்கம், 24.26 சதவீதமாக குறைந்துள்ளது. அது போல, உருளைக்கிழங்கு, கோதுமை ஆகியவற்றின் பணவீக்கம், முறையே, 46.52 சதவீதம் மற்றும் 1.71 சதவீதமாக குறைந்துள்ளன.ஜூலை மாதத்திற்கான, மொத்த விலை பணவீக்கம், 1.88 சதவீதமாக, மாற்றமின்றி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'ரெப்போ' வட்டி குறைக்கப்படுமா?காய்கறிகள், உணவு தானியங்கள் விலை குறைந்ததால், செப்டம்பரில், சில்லரை பணவீக்கம், 3.28 சதவீதமாக, மாற்றமின்றி காணப்பட்டது.கடந்த வாரம், அரசு வெளியிட்ட புள்ளி விபரப்படி, ஆகஸ்டில், தொழில் துறை உற்பத்தி, ஒன்பது மாதங்களில் இல்லாத வகையில், 4.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.தற்போது, செப்டம்பரில், மொத்த விலை பணவீக்கமும் குறைந்துள்ளதாக, அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, 2ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், 'வங்கிகளுக்கு வழங்கும், குறுகிய கால கடனுக்கான, 'ரெப்போ' வட்டி விகிதம், மாற்றமின்றி, 6 சதவீதமாகவே நீடிக்கும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.அதன்பின், தொழில் துறை உற்பத்தி, மொத்த விலை பணவீக்கம் ஆகியவற்றின் வளர்ச்சி விபரங்கள் வெளியாகி உள்ளதால், டிசம்பரில், 'ரெப்போ' வட்டி விகிதங்களை, ரிசர்வ் வங்கி குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மூலக்கதை