தி.நகர் ரங்கநாதன் தெருவில் இனிப்பு தயாரிக்கும் கட்டிடத்தின் 3வது மாடியில் பயங்கர தீ விபத்து: ஊழியர்கள் உயிர் தப்பினர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தி.நகர் ரங்கநாதன் தெருவில் இனிப்பு தயாரிக்கும் கட்டிடத்தின் 3வது மாடியில் பயங்கர தீ விபத்து: ஊழியர்கள் உயிர் தப்பினர்

சென்னை: சென்னை தி. நகர் ரங்கநாதன் தெருவில் மாம்பலம் ரயில் நிலையம் அருகே அஸ்தி டவர்ஸ் என்ற  பெயரில் 3 மாடி கொண்ட கட்டிடம் உள்ளது. கட்டிடத்தின் தரைத்தளத்தில் இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் பல்வேறு சிறு கடைகளுக்கும் இங்கிருந்துதான் இனிப்புகள், கார வகைகள் தயாரித்து மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளை தீபாவளி பண்டிைக கொண்டாடப்படுவதால் இந்த கட்டிடத்தில் 24 மணி நேரமும் இனிப்புகள் தயாரிக்கப்பட்டு வந்தது.

நேற்று நள்ளிரவு வரை கட்டிடத்தின் 3வது மாடியில் ஊழியர்கள் இனிப்புகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதன்பிறகு பணி முடிந்து ஊழியர்கள் அனைவரும் அனைத்து பொருட்களையும் அப்படியே போட்டு விட்டு தூங்க சென்று விட்டனர்.

இன்று அதிகாலை 2 மணி அளிவில் சமையல் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்ததும் காவலாளிகள் உடனடியாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

கட்டிடத்தில் தூங்கி கொண்டிருந்த ஊழியர்களை எழுப்பிவிட்டதால் தீ விபத்தை பார்த்து அலறியடித்து வெளியே ஓடிவந்ததால் உயிர் தப்பினர். அறை முழுவதும் இனிப்புகள் தயாரிக்க எண்ணெய்கள் இருந்ததால் கரும் புகையுடன் தீ வெளியேறியது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் தி. நகர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 3 மணி நேரத்திற்கு மேல் கடுமையாக ேபாராடி தீயை அனைத்தனர்.

தீ பிடித்த தளத்தில் எரிவாயு சிலிண்டர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் வீரர்கள் கவனமாக செயல்பட்டு அனைத்து எரிவாயு சிலிண்டர்களையும் தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தினர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

தீ பிடித்த கட்டிடத்தின் மற்ற தளங்களுக்கும் அருகில் உள்ள பிரபல துணிக்கடையிலும் தீ பரவாமல் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. தீ விபத்து காரணமாக 3வது தளத்தில் இருந்து அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.

இதுகுறித்து மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், இனிப்புகள் தயாரித்துவிட்டு அனைத்து பொருட்களும் வெப்பத்துடன் சமையல் எண்ணெய் அருகே வைத்துவிட்டு சென்றதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தீ விபத்து அதிகாலை ஏற்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் தி. நகரில் இன்று அதிகாலை பெரும் பதற்றம் ஏற்பட்டது.

.

மூலக்கதை