‘இரட்டை இலையை முடக்க வேண்டும் என கோரிக்கை’ டிடிவி தினகரன் ஆதரவு மாஜி எம்எல்ஏக்கள் அதிர்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘இரட்டை இலையை முடக்க வேண்டும் என கோரிக்கை’ டிடிவி தினகரன் ஆதரவு மாஜி எம்எல்ஏக்கள் அதிர்ச்சி

சென்னை: இரட்டை இலையை சின்னத்தை முடக்க வேண்டும் என்று தினகரன் அணியில் சிலர் நேற்று தேர்தல் ஆணையத்தில் வைத்த கோரிக்கையால் தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த பல மாஜி எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது.

இதனால் கட்சியின் பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. இதையடுத்து ஆர். கே.

நகர் இடை தேர்தலின் போது அதிமுக (அம்மா அணி), அதிமுக (புரட்சி தலைவி அம்மா) அணி என இரண்டு அணிகளாக போட்டியிட்டன. ஆனால், ஆர். கே. நகர் இடைதேர்தலில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு புகாராக போனதால் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

இந்நிலையில் நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று கூறி இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக கட்சியையும் எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று சசிகலா அணியினரும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அணியினரும் லாரி, லாரியாக லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர். தற்போது எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணிகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகின்றன.



இதையடுத்து இரட்டை இலை தொடர்பான இறுதி தீர்ப்பை அக்டோபர் 31ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. பின்னர், கடந்த 6 ம் தேதி இரு அணிகளிடமும் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் குறித்து விசாரணை நடத்தியது.

பின்னர், அக்டோபர் 13ம் தேதிக்கு விசாரனையை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்து. இந்நிலையில் தேர்தல் ஆணையத்திடம் கூடுதல் ஆவணம் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று தினகரன் தரப்பு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து நேற்று (16ம் தேதி) இரட்டை இலை குறித்து இரு அணிகளிடமும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது. இதில் இரு அணிகள் தரப்பில் இருந்தும் வழக்கறிஞர்கள் மற்றும் எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் கலந்துகொண்டனர். காரசாரமாக இரட்டை இலை தங்களுக்கு தான் வேண்டும் என இரு அணிகளும் விவாதம் செய்தனர்.

அப்போது தினகரன் அணியை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஓ. பன்னீர் செல்வம் அணியினர் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் நம்பக தன்மை இல்லாதவை, இரட்டை இலை சின்னத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் இல்லையேல் ஒரு தலைபட்சமாக செயல்படாமல் இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

இது டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மத்தியிலும், மாஜி எம்எல்ஏக்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்சி மற்றும் சின்னத்தை நாங்கள் தான் கைப்பற்றுவோம் என தொடர்ந்து தினகரன் கூறி வந்ததாலேயே 18 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட போதும் தற்போதும் இரட்டை இலை மற்றும் அதிமுக கட்சியை மீட்கவே சிலர் தினகரன் அணியில் இருந்து வருகின்றனர்.

ஆனால், திடீரென தினகரன் அணியினரின் எதிர்பார்க்க முடியாத இப்படிபட்ட கோரிக்கையால் சில மாஜி எம்எல்ஏக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். தொடர்ந்து இதுபோன்ற கோரிக்கையை தினகரன் அணி முன்வைத்தால் விரைவில் அணி மாறவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.



தொலைபேசியில் அழுத்தம்

நேற்று இரட்டை இலை சின்னத்தின் மீது விசாரணை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் வரும் 23ம் தேதி மாலை 3 மணிக்கு விசாரணையை ஒத்திவைத்தது. இந்நிலையில் இரட்டை இலையை முடக்க வேண்டும் என்ற தினகரன் அணி கோரிக்கையால் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள மாஜி எம்எல்ஏக்கள் பலர் 23ம் தேதி இந்த கோரிக்கையை முன்வைக்க வேண்டாம்.

அது தொண்டர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தும் என தினகரனுக்கு தொலைபேசி மூலம் அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை