ஜல்லிக்கட்டுக்கு விஜய் ஆதரவு, 'மெர்சல்' பிரச்சனைக்குக் காரணம் ?

தினமலர்  தினமலர்
ஜல்லிக்கட்டுக்கு விஜய் ஆதரவு, மெர்சல் பிரச்சனைக்குக் காரணம் ?

விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் வலை தள பக்கத்தில் பத்து நாட்களுக்கு முன்பாகவே அறிவித்திருந்தனர். படத்தின் தலைப்புக்கு எதிராக வழக்கு நடைபெற்று அதன்பின் அதிலிருந்தும் தீர்வு கிடைத்து படம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த சூழ்நிலையில் விலங்குகள் நல வாரியம் படத்திற்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கவில்லை என கடந்த வாரம் பிரச்னை ஆரம்பமானது. அதையடுத்து திரைப்படத் தணிக்கைக் குழுவினர் படத்திற்கான சான்றிதழை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

விலங்குகள் நல வாரியம் படத்திற்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்காததற்கு இந்த வருடத் துவக்கத்தில் விஜய், மெரினாவில் மாணவர்கள் இணைந்து நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததும் ஒரு காரணம் என்று திரையுலகத்தில் சிலர் பேச ஆரம்பித்துள்ளார்கள்.

மாணவர்கள் போராட்டம் நடத்திய போது விஜய் போராட்டக் களத்திற்கே சென்று மக்களோடு மக்களாக நின்று தன்னுடைய ஆதரவை மறைமுகமாகத் தெரிவித்துவிட்டு வந்தார். மேலும் 'மெர்சல்' திரைப்படத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது என்று பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கிற்கு விலங்குகள் நல வாரியமும் ஆதரவு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான், சமயம் வரும் போது காத்திருந்து 'மெர்சல்' படத்திற்கு இவ்வளவு பிரச்சனைகள் கொடுக்கிறார்கள் என திரையுலகத்தில் பரவலாகப் பேசி வருகிறார்கள். ஆகவே தான், விஜய் நேரடியாக முதல்வரைச் சென்று சந்தித்தார் என்றும் அதன் பிறகே படத்திற்கான தடைகள் கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறது என்றும் சொல்கிறார்கள்.

விஜய் நடித்து வெளிவரும் படங்கள் சமீப காலங்களில் பல பிரச்னைகளையும், தடைகளையும் சந்தித்து வருவது அவருடைய ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை