விலங்குகள் நலவாரியம் தடையில்லா சான்று : தீபாவளிக்கு மெர்சலா களமிறங்கும் மெர்சல்

தினமலர்  தினமலர்
விலங்குகள் நலவாரியம் தடையில்லா சான்று : தீபாவளிக்கு மெர்சலா களமிறங்கும் மெர்சல்

மெர்சல் திரைப்படத்திற்கு விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று வழங்கியதை அடுத்து ரிலீஸ்க்கான சிக்கல் நீங்கியுள்ளது. இதனால் தீபாவளிக்கு மெர்சல் ரிலீஸாவது உறுதியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்யின் ஒவ்வொரு படமும் ரிலீஸாவதில் ஏதாவது ஒரு வகையில் பிரச்னை எழுந்து கொண்டே இருக்கின்றன. காவலனில் ஆரம்பித்த இந்த பிரச்னை, மெர்சலிலும் நீடித்தது.

தலைப்பு பிரச்னை
ஆரம்பத்தில் தலைப்பு பஞ்சாயத்து மற்றும் கேளிக்கை வரி தொடர்பான பிரச்னையால் படம் ரிலீஸாகுமா, ஆகாது என்ற நிலை நீடித்தது. பின்னர் அந்த பிரச்னை தீர்ந்து மெர்சல் தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது.

சென்சார் பிரச்னை
அதன்பின்னர் சென்சார் பிரச்னை நீடித்தது. மெர்சல் படத்தில் மேஜிக் கேரக்டர் விஜய், புறா, பாம்பு போன்ற விலங்குகளை பயன்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும், ஆனால் அதற்கான அனுமதி கிடைக்காமல் இருந்தது. இதனால் படத்திற்கான சென்சாரும் வாங்குவதில் சிக்கல் நீடித்ததால் படம் ரிலீஸில் சுணக்கம் ஏற்பட்டது.

முதல்வருடன் விஜய் சந்திப்பு
ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரான படம் தீபாவளிக்கு ரிலீஸாகவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து இந்த விஷயத்தில் நடிகர் விஜய் நேரடியாகவே களமிறங்கினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மெர்சல் பிரச்னை குறித்து பேசினார். அதோடு, கேளிக்கை வரி தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நன்றியும் தெரிவித்தார்.

தடையில்லா சான்று
இந்நிலையில், மெர்சல் படத்திற்கு இன்று(அக்., 16) விலங்குகள் நலவாரியத்தில் சிறப்புக் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக்கூட்டத்தில் மெர்சலுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டது. இதையடுத்து ரிலீஸ் சிக்கலில் இருந்த முக்கியமான பிரச்சனை தீர்ந்துள்ளது.

விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று வழங்கியுள்ளதால் இனி தணிக்கை சான்றும் பெறுவதில் எந்த பிரச்னையும் இருக்காது என தெரிகிறது. ஆகையால் வருகிற தீபாவளிக்கு மெர்சலாக களமிறங்குகிறது விஜய்யின் மெர்சல்.

மூலக்கதை