தீபாவளி ரேஸில் 3 படங்கள்

தினமலர்  தினமலர்
தீபாவளி ரேஸில் 3 படங்கள்

பொதுவாக தீபாவளி பண்டிகை என்றால் ஸ்வீட், பட்டாசு, புத்தாடைக்கு பிறகு முக்கிய இடம் பிடிப்பது சினிமா தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி லிஸ்டில் இருந்து சினிமா விலகிக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தொலைக்காட்சிகளில் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாவது. அடுத்து தியேட்டரில் அதிக விலைக்கு விற்கப்படும் டிக்கெட்டுகள். இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே தீபாவளிக்கு மக்கள் தியேட்டருக்கு செல்வதும் குறைந்து விட்டது. தீபாவளி படங்களும் குறைந்து விட்டது.

இந்த ஆண்டு கேளிக்கை விரிவிதிப்பு, தயாரிப்பாளர் சங்க போராட்ட அறிவிப்பு காரணமாக தீபாவளிக்கு படங்கள் வெளிவருமா என்ற சந்தேகம் இருந்தது. 2 சதவிகித வரி குறைப்பு, தியேட்டர் கட்டணத்தில் ஒழுங்குமுறை ஆகியவை நடைமுறைக்கு வருவதால் தீபாவளிக்கு 3 படங்கள் வருகிறது. ஏற்கெனவே அறிவித்தபடி விஜய் நடித்த மெர்சல் படம் பல தடைகளை தாண்டி, விஜய் முதல்வரை சந்தித்து வெளிவருகிறது. இந்த படத்துடன் தற்போது சரத்குமார் நடித்துள்ள சென்னையில் ஒரு நாள் 2-ம் பாகமும் வெளிவருகிறது.

12 வருடங்களுக்கு முன்பு விஜய் நடித்த திருப்பாச்சி படமும், சரத்குமார் நடித்த ஐயா படமும் பொங்கலுக்கு மோதியது. இரண்டு படங்களுமே வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் இருவரின் படங்களும் மோதுகிறது.

இது தவிர கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வைபவ், ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள மேயாத மான் படமும் களத்தில் உள்ளது. இந்த வருட தீபாவளி ரேஸில் 3 படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

தயாரிப்பாளர் சங்க போராட்ட அறிவிப்பால் பாதிக்கப்பட்ட விழித்திரு, களத்தூர் கிராமம், உறுதிகொள், திட்டிவாசல், கடைசி பென்ஞ் கார்த்தி ஆகிய படங்கள் நவம்பர் 3ந் தேதி வெளிவருகிறது. அன்றைய தினம் வேறு படங்கள் வெளிவராது என்ற தயாரிப்பாளர் சங்கம் உறுதியளித்திருக்கிறது.

மூலக்கதை