காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிக்க நவீன பாதுகாப்பு கருவிகள்

தினமலர்  தினமலர்
காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிக்க நவீன பாதுகாப்பு கருவிகள்

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்ட, அதிநவீன பாதுகாப்பு கருவிகள், போலீசாருக்கு வழங்கப்படவுள்ளன.

ஜம்மு - காஷ்மீரில், முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது; இங்கு, பாக்., ஆதரவு பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டும் பணியில், பாதுகாப்பு படையினருடன், மாநில போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.

ரூ.8 கோடி:


இந்நிலையில், பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டவும், சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டவும் பயன்படும் அதி நவீன கருவிகள், போலீசாருக்கு வழங்கப்படவுள்ளன.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள, ஊடுருவல் எச்சரிக்கை கருவி கொள்முதல் செய்யப்படவுள்ளது. இந்த கருவி, முக்கிய போலீஸ் கட்டடங்களில் பொருத்தப்படும். இதைத் தாண்டி, பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்தால், இந்த கருவி எச்சரிக்கை ஒலி எழுப்பும். இதனால், பயங்கரவாதிகள் தாக்குதலை தடுத்து நிறுத்த, போலீசாருக்கு அவகாசம் கிடைக்கும்.போலீஸ் அலுவலக, 'கேட்'களில், ரேடியோ அதிர்வெண் மூலமாக வாகனங்களை அடையாளம் பார்த்து அனுமதிக்கும் இயந்திரங்கள், நிறுவப்படவுள்ளன.

தடுக்க முடியும்:


குறிப்பிட்ட, 'டேக்' ஒட்டப்படாத, வாகனங்கள் வந்தால், நுழைவாயில், 'கேட்' திறக்காது. இதனால், பயங்கரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதல்களை தடுக்க முடியும். பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டு, கண்ணிவெடி ஆகியவற்றை கண்டறியும், ஜி.பி.ஆர்., எனப்படும், ரேடார் இயந்திரங்களும் போலீசாருக்கு வழங்கப்படவுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை