மழைகாலத்தில் காய்ச்சல் வரும்: அமைச்சர், ‛கண்டுபிடிப்பு'

தினமலர்  தினமலர்
மழைகாலத்தில் காய்ச்சல் வரும்: அமைச்சர், ‛கண்டுபிடிப்பு

மதுரை: ''மழை காலங்களில் காய்ச்சல் ஏற்படும். டெங்கும் காய்ச்சல் தான்,'' என அமைச்சர் செல்லுார் ராஜு கூறினார்.

மதுரையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்து, டெங்கு காய்ச்சல் தடுப்புக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை விளக்கினார்.

தயார் நிலையில்..


அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: டெங்கு காய்ச்சல் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் அரசின் நடவடிக்கைகளை பாராட்டியுள்ளனர். மேலும் எடுக்க வேண்டிய பணிகள் குறித்தும் அறிவுறுத்தியிருக்கின்றனர். டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் கொசுக்கள் பகலில் உற்பத்தியாகின்றன என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்படுவோரை கண்காணிக்க வேண்டும். இனி ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாதளவுக்கு தீவிரமாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளதையடுத்து மூன்று கட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அசம்பாவிதங்கள் வரும்முன் காப்பது, வந்தால் எதிர்கொள்வது, மீட்பு நடவடிக்கை என நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மழை காலங்களில் சவால்களை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது, என்றார்.

மழை காலங்களில்..


அமைச்சர் செல்லுார் ராஜு பேசியதாவது: மழை காலங்களில் காய்ச்சல் ஏற்படும். டெங்கும் காய்ச்சல் தான். காய்ச்சல் ஏற்பட்டால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். அதற்கான வசதிகளை அரசு செய்துள்ளது. அதை தவிர்த்து தானாகவே மருந்து எடுத்து கொள்கின்றனர். செல்லுார் பகுதியில் தண்ணீர் தேங்காதளவுக்கு மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர், கூடுதல் கலெக்டர் அம்ரித், எம்.பி., கோபாலகிருஷ்ணன், எம்.எல்.ஏ.,க்கள், டி.ஆர்.ஓ., குணாளன், வன அலுவலர் சமர்தா பங்கேற்றனர்.

அமைச்சரின் ஆதங்கம்:


அமைச்சர் உதயகுமார் பேசுகையில், ''டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனால் இந்நோய் பாதிப்பு குறித்து பரபரப்பாக செய்தி வெளியிடும் ஊடகங்கள், 'பாசிட்டிவ்' செய்திகளையும் வெளியிட்டால் நல்லது,'' என ஆதங்கமுற்றார். கூட்டம் முடிந்த நிலையில் வந்த எம்.எல்.ஏ., போஸ், மாடி ஏறி உடனடியாக வர இயலவில்லை என அமைச்சரிடம் தெரிவித்தார். மாடி ஏற வசதியாக லிப்ட் அமைக்கும் பணி விரைந்து நடப்பதாக கலெக்டர் அவர்களிடம் தெரிவித்தார்.

மூலக்கதை