கானாவுடன் இன்று மோதல் வெற்றிக்காக இறக்கவும் வீரர்கள் தயாராக உள்ளனர்: இந்திய அணி பயிற்சியாளர் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கானாவுடன் இன்று மோதல் வெற்றிக்காக இறக்கவும் வீரர்கள் தயாராக உள்ளனர்: இந்திய அணி பயிற்சியாளர் பேட்டி

புது டெல்லி: பிபா யு-17 உலக கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. தொடரை நடத்தும் இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

தனது முதல் 2 போட்டிகளில், அமெரிக்காவுக்கு எதிராக 3-0, கொலம்பியாவுக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. இதனால் தொடரில் இருந்து ஏறக்குறைய இந்தியா வெளியேறி விட்டது.

புது டெல்லி ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில், இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும், தனது கடைசி லீக் போட்டியில், பலம் வாய்ந்த கானா அணியை இந்தியா எதிர்கொள்கிறது. கோல் மழை பொழிந்து மிக அதிக கோல்கள் வித்தியாசத்தில் கானாவை வீழ்த்தினால் மட்டுமே இந்தியாவுக்கு அடுத்து சுற்று வாய்ப்பு கிடைக்கும்.



இது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் லூயிஸ் நார்டன் டி மேட்டோஸ் கூறுகையில், ‘’இந்திய வீரர்கள் இதுவரை விளையாடிய விதம், ஒரு பயிற்சியாளராக எனக்கு பெருமை அளிக்கிறது. மக்களும் பெருமைப்படுவார்கள் என்றே நினைக்கிறேன்.

கானாவுக்கு எதிரான போட்டியில், 100 சதவீதம் அல்ல, 200 சதவீத உழைப்பை கொடுக்க இந்திய வீரர்கள் தயாராக உள்ளனர். வெற்றிக்காக இறக்கவும் வீரர்கள் தயாராக உள்ளனர்.

கானாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற முடியும் என இந்திய வீரர்கள் 100 சதவீதம் நம்புகின்றனர். தோல்வியை பற்றி யோசிக்காமல், வெற்றி பெறும் மனநிலையுடன்தான் போட்டிக்கு செல்ல வேண்டும்’’ என்றார்.

காயம் காரணமாக இந்திய கேப்டன் அமர்ஜித் சிங், சென்ட்ரல் டிபெண்டர் அன்வர் அலி ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது.


.

மூலக்கதை