ஜப்பான், தென்கொரியா நாடுகள் துணையுடன் வட கொரிய எல்லையில் அமெரிக்கா போர் ஒத்திகை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜப்பான், தென்கொரியா நாடுகள் துணையுடன் வட கொரிய எல்லையில் அமெரிக்கா போர் ஒத்திகை

சியோல்: வடகொரியாவை எச்சரிக்கும் விதமாக அந்நாட்டின் எல்லைப் பகுதியில் தென் கொரியா துணையுடன்  அமெரிக்கா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இதனால் வட கொரியாவிற்கும்  அமெரிக்காவிற்கும் இடையில் எந்த நேரத்திலும் போர் மூளும் அபாயம் உள்ளதாக கொரிய தீபகற்ப நாடுகள் பதட்டத்தில் உள்ளன.

வடகொரியாவின் அதிபராக கிம் ஜாங் அன் இருக்கிறார். இவர் அதிபராக பொறுப்பு ஏற்றதும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் ஹைட்ரஜன் குண்டு சோதனைகளை வெற்றிகரமாக நடத்தினார்.

இதனால் வடகொரியாவின் பகைமை நாடுகளான  தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் பதட்டமாகின. உடனடியாக வட கொரியா அணு ஆயுத சோதனையை நடத்துவதை நிறுத்த வேண்டும் என ஐ. நா சபை மூலம் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை, மோசமான அணு ஆயுத சோதனையான ஹைட்ரஜன் குண்டு சோதனை என கடந்த  பிப்ரவரி மாதம் முதல் இதுவரை சோதனைகளை நடத்தியது. இதனால் ஐ. நா சபை வடகொரியா மீது  பொருளாதார தடையை விதித்தது.

இந்நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் ஒரு பைத்தியம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்தார். பதிலுக்கு ட்ரம்பை கடுமையாக விமர்சனம் செய்தார் கிம் ஜாங்.

இந்த நிலையில் அமெரிக்காவிற்கு ஆதரவாக சில நட்பு நாடுகள் களத்தில் இறங்கின. குறிப்பாக ஜப்பான் அமெரிக்காவுடன் நெருக்கமாகி வடகொரியாவிற்கு எதிரான மன நிலையில் இருந்தது.

இதனால் ஜப்பான் மீது கோபம் கொண்ட வடகொரியா ஜப்பானை முழுமையாக அழித்து விடுவோம் என மிரட்டியது.

இந்த நிலையில்   அமெரிக்காவின் குவாம் தீவை தாக்கும் விதமாக ஏவுகணை  சோதனை  ஒன்றை வடகொரியா நடத்தியது. அப்போது வடகொரியா ஏவிய  ஏவுகணை ஜப்பானின் ஹொக்கைடோ தீவின் மேலாக பறந்து சென்று கடலில் விழுந்தது.

இதனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து ட்ரம்ப் வடகொரியாவுடன் தூதரக பேச்சுவார்த்தை நடத்துவதெல்லாம் பலன் தராது. அந்த நாட்டை வழிக்கு கொண்டு வர ஒரே வழி மட்டுமே உண்டு என ‘போர்’ குறித்து சூட்சுமமாக கூறினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு  அமெரிக்காவின்  குவாம் தீவில் உள்ள ஆன்டர்சன் ராணுவ விமான தளத்தில் இருந்து பி1பி லான்சர் என்னும் அதிநவீன பிரமாண்ட போர் விமானங்கள் இரண்டை கொரிய தீபகற்ப பகுதிக்கு  அனுப்பி வைத்தது. இவை கொரிய தீபகற்பத்துக்குள் சென்றதும்  ஏற்கனவே வடகொரியாவுடன் பகையாக இருக்கும்   தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து கொண்டது.

அவர்களின்  ராணுவ விமானமான எப்15 கே என்னும் 2 போர் விமானங்களும் அமெரிக்கா போர் விமானங்களுடன் சென்றன.

இந்த 4 விமானங்களும் நேற்று முன்தினம் இரவில் அதிரடியாக போர் ஒத்திகையில் ஈடுபட்டன. முதல் ஒத்திகை வடகொரியாவின் கிழக்கு பகுதியில் நடத்தப்பட்டது.

அப்போது அமெரிக்க போர் விமானங்கள் இரண்டும், வான்வழியில் இருந்து நிலத்தில் உள்ள இலக்குகளை குறிவைத்து தாக்கும் ஏவுகணைகளை ஏவி  சோதனை நடத்தின. 2வது ஒத்திகை தென்கொரியாவின் தெற்கு பகுதியிலுள்ள சீனாவுக்கு இடையிலான கடல் பகுதியில் நிகழ்த்தப்பட்டது.

இந்த இரண்டு பகுதிகளும் வட கொரியாவின் எல்லையை ஒட்டிய பகுதிகள். இந்த போர் ஒத்திகை குறித்து கூறிய  அமெரிக்க விமானப்படை மேஜர் பேட்ரிக் ஆப்பிள்கேட்  ‘எங்களது நட்பு நாடுகளின் பாதுகாப்புக்காக கொரிய தீபகற்பத்தில் போர்  ஒத்திகையில் ஈடுபட்டோம்.   இந்த போர் ஒத்திகை மிகவும் பாதுகாப்பான முறையிலும், எங்களது வலிமையை வடகொரியாவிற்கு வெளிப்படுத்தவும்  நடத்தினோம்.   இந்த ஒத்திகையில் தென்கொரியாவும், ஜப்பானும் எங்களுடன்  இணைந்து அவர்களின் ஏவுகணைகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்’  எனக் கூறியுள்ளார்.



இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம்  தீவிரமடைந்துள்ளது. எந்த நேரத்திலும் வடகொரியா ஜப்பான் மீதோ தென்கொரியா மீதோ அல்லது அமெரிக்கா மீதோ தாக்குதல் நடத்த  வாய்ப்புள்ளது.

இந்த நிலையில்  அமெரிக்க அதிபர்  டிரம்ப் அவசரமாக நேற்று வெள்ளை மாளிகையில்  ராணுவ அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் ராணுவ அமைச்சர்  ஜேம்ஸ் மத்திஸ், ராணுவ ஜெனரல் ஜோசப் டன்போர்டு ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் வடகொரியாவின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?  தமது நட்பு நாடுகளை  வடகொரியா அணு ஆயுதங்கள் மூலம் தாக்கினால் அதற்கு தகுந்த பதிலடி தர தயாராக அமெரிக்கப் படைகள் இருக்க வேண்டும் என கூறியதாக வெள்ளை மாளிகை வட்டாரங்களில் பேசப்படுகிறது.

கொரிய தீபகற்பத்தில் மிக விரைவில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

.

மூலக்கதை