2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி கேமரா முன் அடிக்கடி தோன்ற சிறப்பாக விளையாடினேன்!: இந்தியாவை கலங்கடித்த பெஹரன்டார்ப் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி கேமரா முன் அடிக்கடி தோன்ற சிறப்பாக விளையாடினேன்!: இந்தியாவை கலங்கடித்த பெஹரன்டார்ப் பேட்டி

கவுஹாத்தி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில், முதலில் பேட் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேதர் ஜாதவ் 27, பாண்டியா 25 ரன்கள் எடுத்தனர்.

பெஹரன்டார்ப் 4, ஜம்பா 2, கோல்டர் நைல், ஆண்ட்ரூ டை, ஸ்டோய்னிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் பேட் செய்த ஆஸ்திரேலியா, 15. 3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஹென்ரிக்ஸ் 62, டிராவிஸ் ஹெட் 48 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். புவனேஸ்வர் குமார், பும்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமன் அடைந்த நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி, வரும் 13ம் தேதி இரவு 7 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய கேப்டன் வார்னர் கூறுகையில், ‘’வெற்றி பெற்றது நல்ல உணர்வை தருகிறது.

பெஹரன்டார்ப், ஜம்பா சிறப்பாக செயல்பட்டனர். ஹென்ரிக்ஸை முன் கூட்டியே களமிறக்குவது நான் ஏற்கனவே பேசியதுதான்.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காகவும் பயன்தரக்கூடிய வகையில் அவர் விளையாடியுள்ளார். தனது அனுபவத்தை தற்போது அவர் வெளிக்காட்டியுள்ளார்.

இந்த பிட்ச் தொடக்கத்தில் இங்கிலாந்து நாட்டு பிட்ச்கள் போல் இருந்தது’’ என்றார்.
 
ஆட்ட நாயகன் விருது வென்ற பெஹரன்டார்ப், இதுவரை 2 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

சர்வதேச ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை. அவர்கூறுகையில், ‘’கேமராக்கள் முன் நான் தோன்றுவது அடிக்கடி நடைபெற்றதில்லை.

எனவே நான் அதற்காக வேலை செய்ய வேண்டியதிருந்தது (சிரிக்கிறார்). முதல் போட்டியில் ஒரு ஓவர் பந்து வீச எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

இருப்பினும் அந்த அனுபவம் சிறப்பானது. ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட வேண்டும் என கடினமாக உழைத்துள்ளேன்.

அதன் ஒவ்வொரு நிமிடத்தையும் விரும்புகிறேன். தரம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக சில விக்கெட்களை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது.

ஐதராபாத் போட்டியிலும் இதை செய்ய விரும்புகிறேன். அதுவரை என்னால் பொறுமையாக காத்திருக்க முடியவில்லை’’ என்றார்.



எதிர்பார்த்தபடி விளையாடவில்லை; கோஹ்லி புலம்பல்

இந்திய கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், ‘’எதிர்பார்த்தபடி நாங்கள் விளையாடவில்லை. போதிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.

ஆஸ்திரேலியா நன்றாக விளையாடியது. பனி படர்ந்த பின்னர் போட்டியை கட்டுப்படுத்துவது கடினமானது.

ரோகித் சர்மாவுக்கு பெஹரன்டார்ப் வீசிய பந்து உண்மையில் அபாரமாக இருந்தது (எல்பிடபிள்யூ ஆனார்). அவரது லைன் மற்றும் லென்த் மிகவும் இறுக்கமாக இருந்தது.

சரியான ஏரியாக்களில் பந்து வீசிய அவருக்கு பாராட்டுக்கள்’’ என்றார்.


.

மூலக்கதை