யு-17 உலக கோப்பையில் விளையாடி வரும் கால்பந்து வீரரின் தந்தை ஜனாதிபதி பதவிக்கு போட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
யு17 உலக கோப்பையில் விளையாடி வரும் கால்பந்து வீரரின் தந்தை ஜனாதிபதி பதவிக்கு போட்டி

புது டெல்லி: பிபா யு-17 உலக கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்க அணிக்காக விளையாடி வருபவர் டிமோத்தி.

அமெரிக்காவின் நட்சத்திர முன்கள வீரர். அவரது தந்தை ஜார்ஜ், லைபீரியா ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டுள்ளார்.

இதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள ஒரு நாடுதான் லைபீரியா.

ஜார்ஜ் ஓய்வு பெற்ற கால்பந்து வீரராவார். கால்பந்து உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் பாலோன் தி ஓர் விருதை வென்ற முதல் ஆப்ரிக்க வீரர் அவர்தான்.

லைபீரியா தேசிய அணி தவிர, பல ஐரோப்பிய கிளப்களிலும் அவர் விளையாடியுள்ளார்.

அதில், இத்தாலியின் ஏசி மிலன் குறிப்பிடத்தகுந்தது.

ஓய்வுக்கு பின் அவர் அரசியலில் ஈடுபட தொடங்கி விட்டார். இது குறித்து டிமோத்தி கூறுகையில், ‘’எனது தந்தை நாட்டு மக்களை அதிகம் நேசிப்பவர்.

அவர்களுக்கு அதிக உதவிகளை செய்துள்ளார். அவரை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

தனது நாட்டை வளமானதாக்க அவர் சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்’’ என்றார். ஜார்ஜ் லைபீரியனாக இருந்தாலும், டிமோத்தி நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரில் பிறந்தவர்.

இந்த வார இறுதியில் லைபீரிய தேர்தல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் டிமோத்தியின் மனதில் கால்பந்து மட்டுமே தற்போது இருக்கும் ஒரே விஷயம் என்று கூற முடியாது.

.

மூலக்கதை