கவுகாத்தியில் இன்று 2வது டி.20 போட்டி தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா: நெருக்கடியில் களம் இறங்கும் ஆஸ்திரேலியா

தமிழ் முரசு  தமிழ் முரசு
கவுகாத்தியில் இன்று 2வது டி.20 போட்டி தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா: நெருக்கடியில் களம் இறங்கும் ஆஸ்திரேலியா

கவுகாத்தி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி. 20 தொடரில் ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 9விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது ஒருநாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தி பார்சபாரா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது. கேப்டன் விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, தவான், ஹர்திக்பாண்டியா, மனிஷ்பாண்டே, ஜாதவ் என சிறந்த பேட்டிங் வரிசையை இந்தியா பெற்றுள்ளது.

பந்து வீச்சில் புவனேஸ்வர்குமார், பும்ரா, குல்தீப், சஹால் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். சுழல் பந்து வீச்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறி வருவதால் அதனை பயன்படுத்தி இந்தியா நெருக்கடி கொடுத்து வருகிறது.

பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்திலும் இந்தியா அசத்தி வருவதால் வீரர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மறுபுறம் ஆஸ்திரேலியா கடும் நெருக்கடியில் களம் இறங்குகிறது.

தோல்வி அடைந்தால் தொடரை இழக்க வேண்டி இருக்கும் என்பதால் வெற்றிக்காக போராடுவார்கள். கேப்டன் டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல் ஆகியோரை நம்பியே பேட்டிங் வரிசை உள்ளது.

இதில் மேக்ஸ்வெல் சஹால் பந்தை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்து வருவதால் நெருக்கடியில் உள்ளார். பந்து வீச்சில் நாதன் கோல்டர் நைலை தவிர மற்றவர்களின் பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை.

தோல்வியில் இருந்து மீள ஆஸ்திரேலியாவும், தொடரை கைப்பற்ற இந்தியாவும் போராடும் என்பதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

தொடர்ச்சியாக 7 வெற்றி.

: இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 14 டி. 20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இந்தியா 10, ஆஸ்திரேலியா 4 போட்டிகளில் வென்றுள்ளன.

கடைசியாக இந்திய அணி 2012ம் ஆண்டு கொழும்பில் நடந்த உலக கோப்பை லீக் சுற்றில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதன்பின்னர் விளையாடிய 7 போட்டியிலும் தொடர்ச்சியாக வென்றுள்ளது.



இந்திய அணி கடைசியாக ஆடிய 5 டி20 போட்டியில் 4ல் வென்றுள்ளது. ஆஸ்திரேலியா கடைசியாக ஆடிய 5ல் 2ல் மட்டுமே வென்றுள்ளது.

முதல் போட்டி/ மழை அச்சுறுத்தல் : கவுகாத்தி பார்சபரா ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

இதனால் பிட்ச் பேட்டிங்கா அல்லது பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கவுகாத்தியில் நேற்று லேசாக மழை பெய்தது.

இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்து இருப்பதால் ஆட்டம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.


.

மூலக்கதை