சவுரவ் கங்குலி செய்த தியாகத்தால் டோனி மிக சிறந்த வீரராக உருவெடுத்தார்: சேவாக் நெகிழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சவுரவ் கங்குலி செய்த தியாகத்தால் டோனி மிக சிறந்த வீரராக உருவெடுத்தார்: சேவாக் நெகிழ்ச்சி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் டோனி மிக சிறந்த வீரராக உருவெடுக்க, முன்னாள் கேப்டன் கங்குலி தியாகம் செய்ததாக, முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘’அந்த சமயத்தில் பேட்டிங் ஆர்டரில் சில பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்து வந்தோம்.

நல்ல தொடக்கம் கிடைத்தால், கங்குலி 3வது வீரராக களமிறங்குவது என்றும், தொடக்கம் மோசமாக அமைந்தால், ரன் ரேட்டை உயர்த்துவதற்காக, டோனி அல்லது இர்பான் பதான் போன்ற அதிரடி வீரர்களை 3வது வீரராக களமிறக்குவது என்றும் முடிவு செய்திருந்தோம். அந்த நேரத்தில், 3-4 போட்டிகளில் டோனியை பேட்டிங் வரிசையில் முன் கூட்டியே 3வது வீரராக களமிறக்கியது கங்குலி எடுத்த முடிவு.



பேட்டிங் வரிசையில் தனது இடத்தை மற்ற ஒரு வீரருக்காக ஒரு சில கேப்டன்கள் மட்டுமே விட்டு கொடுப்பார்கள். தாதா (கங்குலி) மட்டும் அன்று அதை செய்யாமல் இருந்திருந்தால், டோனி இன்று இவ்வளவு பெரிய வீரராக உயர்ந்திருக்க மாட்டார்.

புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் கங்குலிக்கு எப்போதுமே நம்பிக்கை உள்ளது. கங்குலிக்கு பிறகு ராகுல் டிராவிட் கேப்டனாக வந்தபோது, பினிஷர் வாய்ப்பை டோனி பெற்றார்.

ஆனால் சில சமயங்களில் மோசமான ஷாட் விளையாடியதால், டோனி தனது விக்கெட்டை இழந்து கொண்டே வந்தார். இதனால் டோனியை, ராகுல் டிராவிட் ஒரு முறை கடிந்து கொண்டார்.

அன்று முதல் தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்ட டோனி, சிறந்த பினிஷராக உருவெடுத்தார்’’ என்றார்.

.

மூலக்கதை