சொந்த மண்ணில் விளையாட வேண்டிய போட்டிகளை பொதுவான இடங்களில் விளையாடுவது வேதனை அளிக்கிறது: பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவர் இன்சமாம் வருத்தம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சொந்த மண்ணில் விளையாட வேண்டிய போட்டிகளை பொதுவான இடங்களில் விளையாடுவது வேதனை அளிக்கிறது: பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவர் இன்சமாம் வருத்தம்

லாகூர்: 2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பயணித்த பஸ் மீது லாகூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன்பின் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்ல முன்னணி அணிகள் மறுப்பு தெரிவித்தன.

இதனால் பாகிஸ்தான் மண்ணில் கடந்த 8 ஆண்டுகளாக குறிப்பிடத்தகுந்த சர்வதேச போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நடத்தும் தொடர்கள், யுஏஇ போன்ற பொதுவான இடங்களில் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் தேர்வு குழுவின் தலைவருமான இன்சமாம் உல் ஹக் கூறுகையில், ‘’நாங்கள் சொந்த மண்ணில் விளையாட வேண்டிய போட்டிகளை கூட (ஹோம் கேம்ஸ்) பொதுவான இடங்களில் விளையாடுவது வேதனை அளிக்கிறது. எங்கள் நாட்டு சூழ்நிலைகளில் விளையாடக்கூடிய வாய்ப்பும், பாகிஸ்தான் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடக்கூடிய வாய்ப்பும் எங்கள் வீரர்களுக்கு கிடைக்காததால், பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நாங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளோம்’’ என்றார்.

 பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன், ஐசிசி ஒத்துழைப்புடன் உலக லெவன் அணி சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

அந்த தொடர் எவ்வித பிரச்னையுமின்றி நடந்து முடிந்ததால், சர்வதேச போட்டிகளை நடத்த பாகிஸ்தான் பாதுகாப்பான இடம்தான் என பிசிபி நிரூபித்துள்ளது. இதன் எதிரொலியாக, பாகிஸ்தான் சென்று விளையாட இலங்கை அணி சம்மதம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான்-இலங்கை இடையே 2 டெஸ்ட், 5 ஒரு நாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர், யுஏஇ-ல் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி மட்டும் லாகூர் கடாபி மைதானத்தில், வரும் 29ம் தேதி நடைபெறுகிறது.



மற்ற போட்டிகள் அனைத்தும் அபுதாபி, துபாய், ஷார்ஜா போன்ற யுஏஇ நகரங்களில் நடைபெற்று வருகின்றன.   இது குறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில், ‘’பாகிஸ்தான் மண்ணில் விளையாட சம்மதம் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பாகிஸ்தான் மக்கள் இலங்கை அணியை அதிகம் நேசிக்கின்றனர்.

இலங்கை அணி வந்து விளையாடி விட்டால், அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, பாகிஸ்தான் மண்ணில் வழக்கம் போல் போட்டிகள் நடைபெற தொடங்கி விடும்’’ என்றார்.


.

மூலக்கதை